வெடுக்குநாறி மலை- மீட்பு போராட்டத்தை தடுக்க தமிழரசு கட்சி மும்முரம்!

வவுனியா வடக்கின் எல்லையான நெடுங்கேணியின் எல்லைக் கிராமமாகிய ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள தமிழர்களது பூர்வீக வெடுக்குநாறி மலையும் அதிலமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் இன்று சிங்கள பேரினவாதிகளால் தொல்பொருள் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று சூழ்ச்சிகளினூடாக கைப்பற்ற முயலும் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆதரவாக திரைமறைவில் தமிழரசுக் கட்சி செயற்படுவது அம்பலமாகியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபை தமிழரசு கட்சியின் வசமுள்ளது.அதிலும் வவுனியா மாவட்ட தலைவர் சத்தியலிங்கத்தின் அத்தான் முறையானவரே தவிசாளராக இருக்கின்றார்.இவரை சத்தியலிங்கமே முன்னிறுத்தியிருந்தார்.
எனினும் வெடுக்குநாறி பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து நழுவல் போக்கில் இருந்த பிரதேச சபையும் , ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கமும் இவ்விடயத்தில் குழப்பம் விளைவிப்பதாக வெடுக்குநாறி மக்களும், கோவில் நிர்வாகமும் கவலை வெளியிட்டுள்ளன.

வழமைபோலவே இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கதைப்பதாக இரா.சம்பந்தரும், அரசுக்கு எதிராக வழக்கு போடப்போகிறேன் என எம்.ஏ.சுமந்திரனும், தற்போது இப்போராட்டம் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கமும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தமது ஆதரவாளர்களை பங்குபெறச் செய்வதை தடுக்கும் வேலையில் தவிசாளர் தணிகாசலம் என்பவர் இறங்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பெயரில் காவல்துறையின் துணையுடன் போராட்டத்தை முடக்கும் வகையில் நீதிமன்ற தடை உத்தரவினைப்பெற களம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

எனவே அலை அலையென திரண்டு எதிர்வரும் செவ்வாய் கிழமை 9.00மணிக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன் ஒன்றிணைவோம். மண்டியிடா மானத்துடனும் வீழ்ந்துவிடா வீரத்துடனும் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பைக் காட்டுவோமென ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.