விராட் கோலி திருப்பி உதைத்த ‘க்ரீஸ் டப்பா’!

இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தைக் கடந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கோலியின் சிறப்பான சதத்தால் இந்திய அணி வலுவான நிலையை எட்டியிருக்கிறது.
இந்தப் போட்டியில் கோலியின் இரு கேட்ச் வாய்ப்புகள் இங்கிலாந்து அணியால் வீணடிக்கப்பட்டது. கோலி 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் கிடைத்த சுலபமான வாய்ப்பை இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த இங்கிலாந்து வீரர் டாவிட் மலன் தவறவிட்டார். அடுத்தமுறை பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கோலியை வெளியேற்ற இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது கோலி 52 ரன்கள் எடுத்திருந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து கோலியின் மட்டையில் பட்டு இரண்டாம் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த டாவிட் மலனின் கைகளை உரசிச் சென்றது. இது முதல் வாய்ப்பை விடக் கடினமான ஒன்று தான். இருப்பினும் அதனை அவர் பிடித்திருந்தால் இந்தியாவை 200 ரன்களுக்குள்ளாகவே சுருட்டியிருக்க முடியும்.
ஒரே நாளில் 10 விக்கெட்டுகள் விழும் இதுபோன்ற ஆடுகளங்களில் இரு கேட்ச் வாய்ப்புகள் உருவாவது சகஜமானதுதான். இருப்பினும் இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மனஉறுதியுடன் தனிஆளாகப் போராடிய கோலி, சதமடித்து அணியை வலுப்பெறச் செய்திருப்பது பாராட்டிற்குரியது. இவரது இந்தச் சிறப்பான ஆட்டத்துக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
இந்தத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் கோலியின் ஃபார்ம் குறித்து அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது கோலி, 10 இன்னிங்ஸில் விளையாடி, 288 பந்துகளைச் சந்தித்து வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததே இதற்குக் காரணம். இம்முறை ஒரே இன்னிங்ஸில் 149 ரன்கள் (225 பந்துகள்) எடுத்துத் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவரது இந்தச் சாதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சரிவிலிருந்த அணியை முன்னின்று வழிநடத்திச் சென்ற விராட் கோலியின் இந்த ஆட்டம் தனிச்சிறப்புமிக்கது. இது அவரது மனஉறுதியின் வெளிப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், "இது நம்ப முடியாத ஆட்டம். தனி மனிதரின் போராட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "விராட் கோலிக்கு இது முக்கிய ஆட்டமாகும். டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் சிறப்பான தொடக்கம். உங்கள் டெஸ்ட் சதத்திற்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நேற்று தனது 113ஆவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி, 22ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் அதிவிரைவாக 22 டெஸ்ட் சதங்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த போட்டியில் 22 சதத்தை பூர்த்தி செய்த வீரர்களின் விவரம்
டான் பிராட்மேன் (58 போட்டிகள்)
சுனில் கவாஸ்கர் (101 போட்டிகள்)
ஸ்டீவ் ஸ்மித் (108 போட்டிகள்)
விராட் கோலி (113 போட்டிகள்)
சச்சின் டெண்டுல்கர் (114 போட்டிகள்)
முகமது யூசுப் (121 போட்டிகள்)
ஒரு போட்டியில் அணியின் ஸ்கோரில் அதிகபட்ச சதவீதத்தில் தனிநபர் ரன்களைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற வரிசையில் கோலி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார்.
மகேந்திர சிங் தோனி: 82 ரன்கள்
இடம்: ஓவல், இங்கிலாந்து 2014
அணியின் ஸ்கோர்: 148
சதவிகிதம்: 55.41
விராட் கோலி: 149 ரன்கள்
இடம்: எட்ஜ்பாஸ்டன், இங்கிலாந்து 2018
அணியின் ஸ்கோர்: 274
சதவிகிதம்: 54.37
விராட் கோலி: 153 ரன்கள்
இடம்: செஞ்சூரியன், தென்னாப்ரிக்கா 2018
அணியின் ஸ்கோர்: 307
சதவிகிதம்: 49.84

No comments

Powered by Blogger.