அயோத்தி வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு!

அயோத்தியில் மசூதி இருக்குமிடத்தை மாநில அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கூறியுள்ளது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி – பாபர் மசூதிப் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிகழ்வு இந்திய அளவில் பல அரசியல் மாற்றங்களுக்குக் காரணமானது. இதன் தொடர்ச்சியாக, பாபர் மசூதியில் இஸ்லாமிய மக்கள் வழிபாடு செய்வது தொடர்பான வழக்கில், 1994ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், இஸ்லாமிய மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழிபாடு மேற்கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் மசூதி இருக்கும் இடத்தை அரசு கையகப்படுத்தலாம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு எடுத்துக்கொண்டது.

இதன்பிறகு, 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லாவுக்கு வழங்குவதாகத் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை நாடின. இது தொடர்பான பிரதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமிய மக்கள் வழிபாடு செய்வது தொடர்பான வழக்கில் இன்று (செப்டம்பர் 27) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

“அனைத்து வழிபாட்டுத்தலங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். 1994ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கத் தேவையில்லை” என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அசோக் பூஷன். இதனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆமோதித்தார்.

இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாகத் தெரிவித்தார் நீதிபதி அப்துல் நசீர். மசூதி என்பது இஸ்லாமிய மக்களின் ஒருமைப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது எனவும், இது பற்றிய விரிவான ஆய்வு தேவை எனவும், அவர் தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், இதனை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர் நீதிபதிகள்.

No comments

Powered by Blogger.