மதுரை ஆட்சியர் எச்சரிக்கை!

வைகை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்.

கடந்த மாதம் கேரளாவில் பெய்த பெருமழையை அடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமானது. அதிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று அணை நீர்மட்டம் 68.60 அடியை எட்டியது. அன்று வைகை அணையில் இருந்து, அப்பகுதியிலுள்ள விவசாயப் பாசன நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதனையொட்டி நடந்த விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வைகை அணையில் நீர் திறப்பு 120 நாட்களுக்குத் தொடரும் என்று அறிவித்திருந்தது தமிழக அரசு.

தற்போது வரை, வைகை அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாளையிலிருந்து (செப்டம்பர் 14) கூடுதலாக 2,500 கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன். வைகை ஆற்றில் மக்கள் இறங்கவோ, கடக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பற்ற முறையில் செல்பி எடுப்பது மற்றும் குளிப்பது கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.