அமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது!

 தமிழ்நாட்டின் மதுரை நகரைச்
சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்)
ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம்.
இவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.
இவர் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.
தனது கண்டுபிடிப்புபற்றி ராஜலட்சுமி நந்தகுமார் கூறும்போது, “நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பினேன். ஏனென்றால் அவைதான், உடல் நலம் சார்ந்த கருவிகளுக்கு சாதாரணமாக பயன்படும் சமிக்ஞைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.