பூத்களை பலப்படுத்துங்கள்: மோடி!

பாஜக நிர்வாகிகள் கட்சியை பூத் அளவில் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை பொறுத்தவரை பூத் அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. பூத்களில் கவனம் செலுத்துங்கள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகளை வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜெய்ப்பூர், நவாடா,காஸியாபாத், ஹஜாரிபாத், மேற்கு அருணாச்சலம் ஆகிய 5 மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளிடம் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) பேசினார். அப்போது அவர், நிர்வாகிகள் அனைவரும் ‘என் பூத், பலமானது’ என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றும் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 20 குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் கட்சியில் பணியாற்றுகின்றனர் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 2013ஆம் ஆண்டில் இதேநாளில்தான் தான் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவித்த மோடி, “பாஜகவில் மட்டும்தான் சாதாரண தொண்டரும் தலைவராகலாம். என் இடத்தை நாளை வேறு நபர்கள் அடையலாம்” என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் அமைக்கத் திட்டமிட்டுள்ள மெகா கூட்டணி குறித்தும் பேசிய மோடி, “2014ஆம் ஆண்டில் இருந்ததை விட பாஜக இன்னும் வலிமையாக உள்ளது. காற்று பாஜகவுக்கு சாதகமாக அடிக்கிறது. தாங்கள் தகர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதாலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்த்துள்ளன” என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.