ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தல்!

நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவமதிக்கும் விதமாகப் பேசியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 15) புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள சர்ச் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். சர்ச் இருக்கும் இடம் என்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஹெச்.ராஜா அங்கு மேடை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ஹெச். ராஜா பேசியுள்ளார். அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹெச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடா வடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர் நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளார். காணொலி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன. தமிழகத்தின் அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “ஹெச்.ராஜா சிறை செல்ல வேண்டும் என்பது என் விருப்பம் இல்லை, அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இறை நம்பிக்கையுள்ளோர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது எவ்வித வன்முறையும் ஏற்படுவதில்லை. ஆனால் சங்பரிவார் விநாயகர் சதுர்த்தியை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி சமூக அமைதியை சீர்குலைக்க சதி செய்து வருகிறது. இந்த ஆண்டு அவர்கள் தேர்ந்தெடுத்தது செங்கோட்டை.
வன்முறையால் தென்காசி பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. உரிய முன்னெச்சரிக்கையுடன் காவல்துறை செயல்பட்டு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தென்காசியில் வன்முறை சம்பவங்களை தடுத்திருக்க முடியுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஹெச். ராஜா நீதிமன்றத்தை அவதூறாகவும், துச்சமாகவும், பேசியுள்ளதோடு, காவல்துறையையும் மிகக் கேவலமாக விமர்சித்துள்ளார். இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை ராஜாவிடம் பவ்யம் காட்டுவது வன்முறையாளர்களின் திட்டத்திற்கு பயந்து நிற்பதையே வெளிப்படுத்துகிறது.
தமிழக அரசு உடனடியாக அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள், தூண்டியவர்கள், சதி திட்டம் வகுத்து கொடுத்தோர் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கிடையில் வெறுப்பையும், வன்மத்தையும் உருவாக்கும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, “பாஜக ஆட்சி குறித்து கோஷம் எழுப்பிய மாணவி மீது வழக்கு தொடரும் அரசுகள், எல்லை மீறி பேசும் ஹெச்.ராஜா போன்றோர் மீது ஏன் வழக்கு தொடருவது இல்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் காவல் துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் அநாகரிகமாகப் பேசியுள்ள ஹெச். ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.