புதுமண தம்பதிகளுக்கு பெட்ரோல் மொய்!

கடலூரில் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் புதுமணத் தம்பதியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 லிட்டர் பெட்ரோல் பரிசளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் தீபா என்ற தம்பதியினர், புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்தனர்.
முன்பெல்லாம் பெட்ரோல் விலை, எப்போதாவது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் ஏறும். அல்லது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து குறையவும் செய்யும். ஆனால் இப்போது, பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கலாம் என்பதால், சிறிது சிறிதாக உயர்த்தி தற்போது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பெட்ரோலை நூதன பரிசாக வழங்கியுள்ளனர். இந்த பரிசுக்கு மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டியுள்ளனர். இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் இதுமாதிரி சுப நிகழ்ச்சியில் கூடும் இடத்தில், பெட்ரோலால் தீ விபத்து ஏற்பட்டால் அது பெரும் அசம்பாவிதமாக அமையவும் வாய்ப்பிருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.