வங்கதேசத்துடன் அசோக் லேலாண்ட் ஒப்பந்தம்!

வங்கதேசத்துக்கு 200 ஏசி பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக இந்தியாவின் அசோக் லேலாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே.தசரி மணி கண்ட்ரோல் ஊடகத்திடம் பேசுகையில், “இரண்டடுக்குப் பேருந்துகளுக்கு அடுத்து வங்கதேச நாட்டுக்குப் பேருந்துகள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மீண்டும் பெற்றுள்ளோம். இது அந்த நாடு எங்கள் தயாரிப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்று. எங்களுடைய ஏற்றுமதி நாடுகளில் வங்கதேசம் முக்கிய நாடாக உள்ளது. இந்த புதிய ஒப்பந்தங்களின் மூலம் வங்க தேசத்தில் எங்களுடைய சந்தைப் பங்கு அதிகரித்து வருகிறது” என்றார்.
இந்த ஒப்பந்தத்தின்படி வங்கதேச நாட்டுக்கு 200 ஏசி பேருந்துகளை அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பேருந்துகளை முழுமையாக அசோக் லேலாண்ட் நிறுவனம் மட்டுமே கட்டமைக்கிறது. வங்கதேச சாலைப் போக்குவரத்துக் கழகம் இந்தப் பேருந்துகளை வாங்கிக் கொள்கிறது. முன்னதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி அசோக் லேலாண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘வங்கதேசத்துக்கு 300 இரட்டை அடுக்கு (Double-Decker) பேருந்துகளை விநியோகம் செய்வதற்காக அந்நாட்டு சாலைப் போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 8 மாதங்களுக்குள் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு விநியோகம் செய்யப்படும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.