ஹெச்.ராஜா கருத்து: திரைத்துறையினர் எதிர்ப்பு!

பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, நீதித்துறை, காவல்துறை பற்றி கூறிய கருத்திற்கு திரையுலகைச் சார்ந்தவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது, நீதிமன்றம் குறித்தும் காவல் துறை குறித்தும் சர்ச்சைக்குரிய வார்த்தையைக் கூறி விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த், “அப்பாவி பொதுமக்கள் போராடும்போது சுட்டுக்கொல்லும் காவல்துறை, நீதிமன்றம் காவல்துறை குறித்து ஹெச்.ராஜா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கண்டனத்துக்குரியது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘பாஸிச பாஜக ஒழிக’ என ஒரு அரசியல் கட்சியை விமர்சனம் செய்த சோபியாவை உடனே கைது செய்த காவல்துறை, ஒட்டுமொத்த காவல்துறை, நீதித்துறையைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தவரை கைது செய்யாதது ஏன்? என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
“நீதிமன்றம் பற்றி நான் பேசியதை யாரோ எடிட் செய்து போட்டிருக்கிறார்கள்” என்று ஹெச்.ராஜா கூறியதற்கு கரு.பழனியப்பன் தனது கருத்தை நியூஸ் செவன் தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார். அதில், “ஆமாங்க பாவம், அதைக் கண்டிக்க வேண்டும். யாரோ ஒருவர் வீட்டில் உட்கார்ந்து திட்டமிட்டு இதை செய்து வருகிறார். ஹெச்.ராஜாவை எப்படியாவது மாட்டவைக்க, அவரது குரலில் பேச வேண்டும் எனக் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்த வேண்டும். ஹெச்.ராஜா போன்ற தூய ஆத்மாவிற்கு எதிராக செயல்படுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இவர் எப்போதும் பயங்கரமாக சவுண்டைக் கொடுக்க வேண்டியது, ஏய் அங்க என்னப்பா சத்தம் என்று கேட்டால், ‘சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா’ என்ற கதையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பினர்களிடமிருந்து ஹெச்.ராஜாவின் கருத்திற்கு கண்டனங்களும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்ததை அடுத்து அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.