பலகுரலுடன் இணைந்த இனிய குரல்!

பிருத்விராஜ் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான `செல்லுலாய்ட்' படத்தில்
`காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் மலையாள ரசிகர்களிடமும், அப்பாடலின் தமிழ் வெர்ஷனில் பழநிபாரதி வரிகளில் ஒலித்த "காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன" பாடலின் வாயிலாக தன் காந்தக் குரலால் தமிழ் ரசிகர்களிடமும் மனம் கவர்ந்த பின்னணி பாடகியானவர் வைக்கம் விஜயலக்ஷ்மி.
பிறவியிலே பார்வையற்றவரான இவர், சாதிப்பதற்கு பார்வை குறைபாடு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். `காற்றே காற்றே' பாடலுக்குப் பிறகு தமிழில் `குக்கூ' படத்தில் `கோடையில மழை போல' பாடலையும் `ரோமியோ ஜுலியட்' படத்தில் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய்' பாடலையும் பாடியுள்ளார். அதோடு `வீர சிவாஜி' படத்தில் `சொப்பன சுந்தரி' பாடலையும் பாடி இளசுகள் மனசிலும் இடம்பிடித்தார்.
இவரின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகவுள்ளது. இதில், சமீபத்தில் மீன் விற்றதன் மூலம் பிரபலமான மாணவி ஹனான் நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே விஜயலக்ஷ்மிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வைக்கம் விஜயலக்ஷ்மிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நேற்று (செப்டம்பர் 10) எளிமையாக அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அடுத்த மாதம் 22ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. விஜயலக்ஷ்மியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.