உடலுறுப்பு தானம்: விழிப்புணர்வு மாரத்தான்!

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் போட்டி இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் தமிழக சுகாதாரத் துறை சார்பில், உறுப்பு தானம் செய்வோம் உயிர்களைக் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " இந்தியாவிலேயே தமிழகம் தான் உடலுறுப்பு தானம் செய்வதில் முதன்மை இடத்தில் உள்ளது. தொடர்ந்து மூன்று முறை இதற்கான விருதைத் தமிழகம் பெற்றது. இன்னும் உலக அளவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்கும். பொதுமக்களுக்கு உடலுறுப்பு தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதய தின விழிப்புணர்வு மாரத்தான்
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி மருத்துவமனை சார்பில் இன்று விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
இந்த மராத்தான் போட்டியை சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வயது வாரியாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி 5 பிரிவுகளாக நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு துணை ஆட்சியர் வந்தனா கார்க் பரிசுகளை வழங்கினார்.

No comments

Powered by Blogger.