நிலக்கரி பற்றாக்குறை: நெருக்கடியில் மின் உற்பத்தி!

மின்சார உற்பத்திக்காக நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 14) எழுதியுள்ள கடிதத்தில், “நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து தமிழகத்திற்கு வரும் நிலக்கரியின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், மாநிலத்தின் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை உங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் செயல்படும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வெறும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனல் மின் நிலையங்களை தொடர்ந்து இயக்குவதற்கு நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. அதாவது நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 பெட்டிகள் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7-8 பெட்டிகள் வரைதான் எங்களுக்கு வருகிறது. காற்றாலை மின் உற்பத்திக்கான காலமும் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளதால், அதிலிருந்து வரும் மின்சாரமும் நிலையற்றதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், வழங்கப்படும் நிலக்கரியின் அளவை உடனடியாக உயர்த்தாவிடில், சில அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழல் வரும். இதனால் தமிழகத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

”எனவே தாங்கள் நிலக்கரி மற்றும் ரயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி, நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் தங்கமணி, “அனைத்து அனல் மின் நிலையங்களும் முழுமையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அனல் மின் நிலையங்களுக்கு சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதன் அளவை அதிகப்படுத்தாவிட்டால், மின்சார உற்பத்தி பாதிக்கும் என்று முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.