சுற்றுலாவை மேம்படுத்த கேரளா திட்டம்!

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரும் கேரள மாநிலம் தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழையாலும் வெள்ளப் பெருக்காலும் அம்மாநிலமே சீர்குலைந்துள்ளது. பொருட்சேதம், உயிர்ச் சேதத்துடன் சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வர்த்தகம், வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகின. நிவாரண உதவிகள் வாயிலாக மெல்ல மெல்ல கேரள மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், சீரமைப்புப் பணிகளை அம்மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. மத்திய அரசிடம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.4,700 கோடியைக் கேரள அரசு கேட்டுள்ளது.

’கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவின் சிறப்பம்சமே அதன் இயற்கை வளமும் சுற்றுலாத் தலங்களும்தான். சுற்றுலா மூலம் அம்மாநிலம் கணிசமான வருவாயையும் ஈட்டி வருகிறது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களைச் சீரமைக்கும் பணியில் 12 அம்ச செயல்திட்டத்தை கேரள சுற்றுலா துறை வகுத்துள்ளது. அதன்படி, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளைச் சீரமைக்கவும், சந்தைப்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஆர்வத்துடன் வரவைக்க அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சாலையோர விழிப்புணர்வுக் கண்காட்சிகளை நடத்தவும், வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கவும் கேரளாவின் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

ஆய்வு நிறுவனமான இக்ராவின் மதிப்பீட்டின்படி, 2017ஆம் ஆண்டில் மொத்தம் 147 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வருகை புரிந்திருந்தனர். இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து மட்டும் 10.9 லட்சம் பேர் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர். சுற்றுலாத் துறை வாயிலாக அம்மாநிலத்துக்கு 2017ஆம் ஆண்டில் ரூ.8,392 கோடி அந்நியச் செலாவணி கிடைத்திருக்கிறது. 
Powered by Blogger.