சமத்துவபுரங்கள்: அரசு பராமரிக்காதது ஏன்?

பெரியார் நினைவு சமத்துவபுரங்களையும், அங்குள்ள பெரியார் சிலைகளையும் அதிமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை என்று தி.க.தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தீண்டாமையை ஒழிக்கும் நோக்கிலும், சாதிகள் ஒழிக்கும் எண்ணத்திலும் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் திமுக ஆட்சிகாலத்தில் முன்னெடுக்கப்பட்டது. மாவட்டத்தின் குறிப்பிட்ட இடங்களில் 100 வீடுகள் கட்டப்பட்டு அவை பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, இதர சமூகத்தினருக்கு 10 என்ற விதத்தில் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சி வந்த பிறகு இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை.

தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள், நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழக அரசு பராமரிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (செப்டம்பர் 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஜாதி ஒழிப்பின் ‘அமைதிப் புரட்சியாக’ ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இடங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கி இந்தியாவிற்கு ஜாதி ஒழிப்புக்கான வழிகாட்டினார். சமத்துவபுரம் ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இன்றுள்ள அதிமுக அரசினால் சரியான பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்றன. பெரியார் சிலைகளும் பல இடங்களில் வண்ணம் தீட்டப்படாமலும், தூய்மைப்படுத்தப்படாமலும் இருப்பது அதிமுக அரசுக்கு ஒருபோதும் பெருமையளிப்பதாகாது. இதில் உடனடியாக தமிழக அரசு தக்க கவனம் செலுத்திட வேண்டும். தயவு செய்து இதில் அரசியல் பார்வை வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.பெரியார் பிறந்தநாள் விழாவை குடும்பம் குடும்பமாக கொண்டாடுவோம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.