வெற்றியுடன் தொடங்கியது வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி, 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நேற்று (செப்டம்பர் 15) இலங்கை, வங்கதேச அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்கதேசம் மலிங்காவின் வேகத்தில் திணறியது. முதல் ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை மலிங்காவின் வேகத்திற்கும், அடுத்த ஓவரில் தொடக்க வீரர் தமீம் இக்பாலை அவரது மணிக்கட்டு காயத்திற்கும் பறிகொடுத்தது. வலி தாங்க முடியாத தமிம், ரிடையர்டு ஹார்ட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த முஷ்பிகுர் ரகுமான் முதலில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் ஆடத் தொடங்கினார். மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. முஷ்பிகுர் சிறப்பாக ஆடி சதத்தைக் கடந்தார்.
47 ஓவர்களில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் முதல் ஓவரில் காயமடைந்து மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட தமிம் இக்பால், ஆடியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். ஒற்றைக் கையுறையை முழுமையாக அணிந்தும், கைக்கட்டுடன் மற்றொன்றைப் பாதி அணிந்தவாறும் களத்திற்கு வந்த அவர், ஒற்றைக் கையுடன் பேட் செய்து ஒரு பந்தைத் தடுத்து நிறுத்தினார். அதன்பிறகு அடுத்த 3 ஓவரையும் முஷ்பிகுர் ரஹிமே பேட் செய்து பவுண்டரிகள் விளாசத் தொடங்கினார். இவர் 146 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்ததும் வங்கதேச அணியின் இன்னிங்ஸ் 261 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
இதனைத் துரத்திய இலங்கை அணி 35.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களுக்குச் சுருண்டது. முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை அணியின் வீழ்ச்சி
ஜெயவர்தனே, சங்கக்காரா ஆகியோரின் காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த இலங்கை அணி, அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஓப்பனிங்கில் தொடங்கி, மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர் என அனைத்துத் துறையிலும் திணறிவருகிறது. பந்துவீச்சுப் படை இதைவிடப் பரிதாப நிலையில் உள்ளது. தற்போதைய பந்துவீச்சாளர்கள் ஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாகப் பந்து வீசுகிறார்களே தவிர, நிலையாக விக்கெட் வீழ்த்தும் நிலையில் சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை. சீனியர் வீரரான மலிங்கா காயம் காரணமாகக் கடந்த ஆண்டு முதல் அணியிலிருந்து விலகியே இருந்தார். தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்து ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அதே ஃபார்மில் மீண்டும் திரும்பியிருப்பது அணிக்குக் கூடுதல் பலம் என்றாலும், அணியின் வெற்றிக்கு மற்ற வீரர்களின் பங்களிப்பும் அவசியமானதாகும்.
இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் செப்டம்பர் 17ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகக் கட்டாய வெற்றியை நோக்கிக் களமிறங்கவுள்ளது. புதிய அணி என்பதால் மற்ற அணிகளைப் போல் ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. டி20யில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான ரஷீத் கான், அனுபவ வீரர் முகமது நபி ஆகியோரைக் கொண்டு ஒருநாள் போட்டியிலும் அந்த அணி தனது ஆதிக்கத்தைத் தொடரக் காத்திருக்கும் என்பதால் இலங்கை அணிக்கு இந்தப் போட்டி சவாலானதாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.