பிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை என விளக்கம்!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தொடரப்பட்ட வழக்கு விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்கோ முலக்கல் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் அங்கம் வகிக்கும் மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை தெரிவித்துள்ளது.

ஜலந்தரில் இருக்கும் மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை, கேரள கன்னியாஸ்திரீ வெளியிட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் 9 பேருடன் இணைந்து பிஷப்புக்கு எதிராகச் சதிச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. புகார் அளித்த கன்னியாஸ்திரீயின் நண்பர்களே, தேவாலய வருகைப் பதிவேட்டைக் கையாண்டவர்கள் என்றும், அதில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்றும் அந்தச் சபை கூறியுள்ளது.

கன்னியாஸ்திரீ சிசிடிவி விவரங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ள சபை, கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறும் 2015ஆம் ஆண்டு மே 23ஆம் தேதியன்று பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரீயின் சகோதரரும் பி‌ஷப் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். “பி‌ஷப் பிராங்கோ முலக்கல் தான் குற்றமற்றவர் என்று கூறுவது பொய். அவர் செய்த தவறை வெளியே கூறாமல் இருக்க, ரூ.5 கோடி பணம் மற்றும் 10 ஏக்கர் நிலம் தருவதாகப் பேரம் பேசினர். இதையும் நாங்கள் போலீசில் தெரிவித்துள்ளோம்” என்றார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு ஆதரவு தெரிவித்து கொச்சியில் கத்தோலிக்க கிறித்தவ அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் 6ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரீகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பணிபுரியும் பிஷப் பிராங்கோவைக் கண்டித்து, மகளிர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.