விடுதலைப்போராளி இசைப்பிரியா

இசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை
வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா முவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதையத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.
இரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதையத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதையத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லைஎன்று மருத்துவர்கள் கூறினர்.ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர் யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் உடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.
சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் ஆனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா. 
இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பெருந்தகூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரிய என்று அழைக்க தொடங்கினர்.. 
நிதர்சனத்தின் உடாக தன்னை அறிமுக படுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்பதுக்காகவும் உருவாக்க படும் ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளரக்கினர்.தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது அனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அநேகராலும் நன்கு அறியப்பட்டாள்.கனீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை உருராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.
அத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர்வரை தமிழ்ழீழ தொலைகட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.(2007 ) ஆண்டு இசைப்பிரியவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ள பட்டன.நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்ய பட்டார்.கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர். வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..
நாட்டுகானதும் வீட்டுகானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரிய தாய்மையுர்றாள்.இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது.தய்மையுர்ரிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது.இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள்.அகல்யாள் என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது.கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரிய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது குழந்தைக்கான பால்மாவை தேடி தேடி ஓடி ஓடி வாங்கி வைத்திருந்தாள்.குழந்தை அகல்யாலும் வழமைக்கு மாறாக முன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள்.உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள்.அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது.நெருப்பு காச்சலில் குழந்தையின் உடல் நடுக்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாளின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
மழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது.பதறினாள் கத்தினாள் அழுதாள் அனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை.சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள்.இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா இசைப்பிரிய தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும் இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பினக்குவியலும் காயம் பட்டவர்க்களுமாக துடித்துகொண்டிருக்கையில் ஓடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.
வன்னியில் இசைப்பிரியாவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர்.வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அவலை ஆனாள்.இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுர்றாள் தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரிய.தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.
நீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள்.அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள்.அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால்.மே திங்கள் ( 18 ) நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.
வர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னிமுளுவதையும் கையாக படுத்தியது சிறிலங்கா அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயபட்ட போராளிகள் மீதும் மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர்.தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர் சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்.உடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரிய இலகுவாக அடையாளம் காணப்பட்டார்.பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள்.தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார்.முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர்.உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது.உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது. 
ஓயுமலைய புலிகள் அலைகள் தமிழ் மக்களெல்லாம் தம் விடுதலைக்காய் போராடும் புலிகள் என்பதை மறந்தவன் உலகநாடுகளுக்கு சாதகமான பதிலை கூறி எமர்றிவந்தான் .தாயக உறவுகளை போர்க்கைதிகளாக வைத்து புலம்பெயர் தமிழரையும் அடக்க எண்ணினான்.இப்படியாக ஆண்டுகள் கடந்து விட்டது (2010 ) ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றிவிழ கொண்டாடியது சிங்கள அரசு.சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம் காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என்று கூறியது.பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும் படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.
இது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர். 
உலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்டநாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது.அம்மா அம்மா என்று கத்தியிருப்பாள் வழியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா அம்மா அம்மா என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள்.அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் – என்ற விக்கலோடு தன் முச்சை விட்டால் இசைப்பிரிய கொல்லபட்டார் கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது.தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ தாலட்டு பாடி துங்கவைத்த தாயை தன் தோள் சுமந்த தந்தையை மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை பிரிக்கமுடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ உயிருக்கு உயிராய் பெற்றுவளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ அயோ அயோ என கொடுமையிது…
நன்றி
தமிழ்நதி கார்த்திகா
கனடிய தமிழ் வானொலி
நாட்டுக்காக சென்றவள் ..மக்களுக்காக போராடியவள் ..தனது கடைசி நிமிடம் மட்டும் தாய் மண்ணை நேசித்தாள் இசைப்பிரியா
*************
சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் – இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்
என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன் அரசனான மகிந்தராஜபக்ஷவும் எத்தகைய போர் குற்றவாளிகள் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல காணொளிகள் நிரூபித்து வருகின்றன.
இரத்தம் நனைந்த நிலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் பற்றிய முதல் காணொளி வெளியாகி இலங்கை அரசின் யுத்தக் கொடுமைகளையும் குற்றங்களையும் அம்பலமாக்கியது. அந்தக் காணொளியில் போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும் கண்களும் பின்பக்கமாக கட்டப்பட்டு ஒவ்வொருத்தராக இருத்தப்பட்டு சுட்டுக் கொல்லும் கொடுமைமிகு யுத்தக் குற்றத்தை இலங்கைப் படைகள் செய்திருந்து அம்பலமானது. அந்தக் காட்சியில் கொல்லப்பட்ட போராளிகள் பின்பக்கமாகவே காட்டப்பட்டனர். எனது பிள்ளை எங்கோ இருக்கிறது. என் பிள்ளை திரும்பி வரும் என்று காத்திருந்த பல பெற்றோர்களை அந்தக் காணொளி மீண்டும் அலைத்தது. ஒவ்வொரு உறவுகளும் இது என் உறவாக இருக்குமோ அல்லது என் உறவுக்கு இப்படி என்ன நடந்ததோ? என்று தங்களுக்குள் துடித்தார்கள்.
தமிழர்களை கொன்று போட்டபடி இரத்தம் வழியும் வாயால் நாங்கள் சனங்களை கொல்லவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சொல்லிக் கொண்டு மாபெரும் படுகொலையை நிகழ்த்தி ஒரு மனித இனத்தை பெருந்துயருக்கு ஆளாக்கிய இலங்கை அரசும் அதன் அரசன் மகிந்தராஜபக்ஷவும் அதன் தளபதிகளும் இந்தக் காணொளியையும் மறுத்தார்கள். தங்கள் படைகள் இல்லை என்றும் தங்கள் படைகள் மனிதாபிமான யுத்தத்தையே நடத்தினர் என்றும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். யுத்த களம் ஒன்றில் சரணடைந்த போராளிகளை அல்லது படைதரப்பை எப்படி கையாள வேண்டும் என்கிற யுத்த விதிகளை மீறி இலங்கைப் படைகள் யுத்த களங்களில் செய்த கொடுமைகள் மிகவும் பயங்கரமானவை. வெளியில் இன்னும் அறியப்படாத கொடுமைகளும் இருக்கின்றன. நிருவாணமாக, கண்களை கட்டி, கைகளை கட்டி, பின்பக்கமாக கொன்று அவர்களின் இரத்தத்தால் நிலத்தை கழுவ வேண்டும் என்பதைப் போன்ற கொடுமையான விருப்பங்கள் இலங்கைப் படைகளுக்கு இருக்கின்றன. இப்படிப்பட்ட படைகளின் வேறு பல கொடுமையான விருப்பங்களும் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
தலைவரின் மகள் துவாரகா கற்பழித்து கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டு வெளியான படம்தான் இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்தைக் வெளிக்காட்டியது. துடிதுடித்து வன்மமாக கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் வன்புணர்வு செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் அந்தக் காணொளி தெளிவாக்கியிருந்தது. குறித்த படம் தலைவரின் மகள் துவாரகாவின் உடையதல்ல அந்தப் படத்தில் இருப்பவர் ஊடகப் போராளி இசைப்பிரியா என்ற விடயம் பின்னர் தெரியவும் வந்திருந்தது. இசைப்பிரியா எங்கிருக்கிறார்? அவர் எங்கேனும் சரணைடைந்து இருக்கிறாரா? என்று காத்திருந்தவர்களுக்கு அவர் இல்லை; அவர் எப்படிக் கொடுமையாக கொல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தியுடன் துயரம் பீறிடும் பயங்கரக் காட்சி வெளிவந்தது.
அதன் பிறகு வெளியான ஒரு காணொளித் தொகுதியில் மேலும் பல போராளிகளும் பொதுமக்களும் சிறுவன் ஒருவனும் சித்திரவதைக்காக கைது செய்யப்பட்டிருக்கும் காட்சி வெளியானது. அந்தக் காட்சியில் அனைவரும் பொதுமக்கள் உடையில் காணப்பட்டார்கள். அந்தக் காட்சியில் சிலரை அவர்களின் உறவுகள் இனங்காணங்கண்டிருந்தார்கள். யுத்தகளம் ஒன்றில் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை அவர்கள் கைதிகளாக இருத்தப்பட்டிருக்கும் சூழல் காட்டுகிறது. தென்னை ஓலைகளை பாதுகாப்பு வேலிகளுக்காக இலங்கைப் படைகளும் போராளிகளும் பயன்படுத்துவார்கள். அந்த தென்னை ஓலைகளில்தான் அந்தத் தமிழர்கள் இருத்தப்பட்டிருந்தார்கள்.
மண் தடுப்பு அல்லது பெரிய பதுங்குகுழி போன்ற சூழலாகவும் தெரிகிறது. அவர்கள் யுத்த களம் ஒன்றில் கைதிகளாக பிடிபட்ட நிலையில்தான் இருந்தார்கள் என்பதையும் பெரும் ஆபத்தை எதிர்கொண்டு விட்டார்கள் என்பதையும் அந்தக் காணொளி வெளிப்படுத்தியது. அவர்களின் கண்களில் கொலையின் கொடும் பயம் உறைந்திருந்தது. எதுவும் செய்யாத எதையும் அறியாத அந்தச் சிறுவனும் கொலைப் பலிக்கு அஞ்சியபடி இருக்கிறான். அவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் சிலரை இனங்கண்ட உறவுகள் அவர்கள் இன்னும் மீளவில்லை என்று சொல்லியுள்ளார்கள். பொதுசனக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் அந்தக் காணொளியில் இருப்பதாக இனங்காட்டியிருந்தார். சிலர் இனங்காட்ட அஞ்சியிருக்கிறார்கள்.
இதே காணொளித் தொகுதியில் இசைப்பிரியாவின் படமும் இருந்தது. மண்மூட்டைகளில் தலை வைத்தபடி இருக்கிற இந்தக் காட்சியில் இசைப்பிரியாவின் அருகில் இன்னொரு பெண்ணும் கொல்லப்பட்ட நிலையில் கிடக்கிறார். இசைப்பிரியா வெள்ளைத் துணியால் போர்த்து மூடப்பட்டிருக்கிறார். மற்றைய பெண்ணைப் இனங்காண முடியாதிருக்கிறது. இந்த விவரணப்படத்தில் நீளமான நேர்காணலை வழங்கும் இராணுவ அதிகாரி தங்கள் படைகள் யுத்தகளத்தில் எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் சரணடைந்த போராளிகளை கொலை செய்ய அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் எப்படி கொலைகளைச் செய்தோம்; எப்படி சித்திரவதைகளைச் செய்தோம் என்றும் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். முகம் மறைப்பட்ட நிலையில் குறித்த இராணுவ உயரதிகாரி தன் நேர்காணலை வழங்கியிருக்கிறார்.
அந்தக் கொடும் களம் எப்படி இருக்கும் என்பதை இந்த முகங்கள் நமக்குச் சொல்லுகின்றன. அந்த மனிதர்களின் இறுதி வார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை இந்த காட்சிகள் சொல்லுகின்றன. மரணமும் கொடிய மிருகங்களும் அந்தத் தமிழர்களை கொடுமையாக வதைத்துக் கொன்றிருக்கிறது. இசைப்பிரியாவை போன்ற அந்த மனிதர்களின் பின்னால் நீளமான குளிர்ச்சியான வலிமை மிகுந்த பல இரகசியங்கள், கனவின் ஏக்கங்கள், வாழ்வின் இலட்சியத்தின் தாககங்கள் கிடக்கின்றன. இந்தப் பதிவில் இசைப்பிரியா பற்றிய சில ஞாபகங்களை பதிவு செய்ய நினைக்கிறேன். இசைப்பிரியாவின் சூழலில் வாழ்ந்த அவருடன் பணியாற்றிய அவருடன் நெருங்கியிருந்த பலர் இன்று அவர்களைக் குறித்து எதுவும் பேச முடியாதிருக்கிறார்கள் என்பதையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.
1981இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார். நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீடாக வெளிவரும் காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு பெரும்பாலானவற்றை இசைப்பிரியாவே அறிமுகம் வழங்கி தொகுத்தளித்திருக்கிறார். இளம் அறிவிப்பாளராக அந்த ஒளிவீச்சுக்களில் அறிமுகமாகிய இசைப்பிரியா ஈழத் தமிழர்களுக்கேயுரிய முறையில் வீடியோ சித்திரங்களை அறிமுகப்படுத்துபவர். ஈழ மக்களின் கனவுகள், ஏக்கங்கள், மண்ணுடன் மண்ணான வாழ்வுகள், இடம்பெயர் அலைச்சல்கள், நிலப்பிரிவுகள், மனிதத்துயரங்கள், போர்க்கொடுமைகள், போர்க்களங்கள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் என்று விடுதலைப் போராட்டத்தின் அன்றைய காலத்து காட்சிகளை ஒவ்வொரு மாதமும் கொண்டு வரும் ஒளிவீச்சை குறித்த தன்மைகளை அதற்கு ஏற்ப அறிமுகப்படுத்தி இசைப்பிரியா வழங்குபவர்.
விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாக பரிணமித்தது. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார். போராளிகளின் ஊடகப் பிரிவில் மாதாந்தமாக ஒளிக்காட்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிதர்சனம், ஒரு தேசிய தொலைக்காட்சியாக உருவாகிய வேளையில் செய்திப்பரிவில் இருந்த பணிகளை செம்மையாக இசைப்பிரியா செய்திருக்கிறார். ஊடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர் தன்னை ஒரு ஊடகப் போராளியாக்கி போராட்டத்திற்கு உன்னதமான பங்களித்தார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைப்பிரியா வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றிருந்தார். 1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கற்றிருந்தார். பின்னர் உயர் தரக் கல்வியை கற்றுக் கொண்டிருந்தபொழுது அதனை இடை நிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.
தமீழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. தொலைக்காட்சியின் தொடக்க கால செய்திப்பரிவுப் பொறுப்பாளராக இருந்த இசைப்பிரியா பின்னர் ஒரு படைப்பாளியாக மாறி தேசியத் தொலைக்காட்சிக்கு பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். இசைப்பிரியா என்றதும் எனக்கு ‘துயிலறைக்காவியம்’ என்ற விவரண நிகழ்ச்சிதான் ஞாபகத்து வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு படைப்பாளிகளின் பின்னாலும் அவர்களின் பெயர்கள் அடைமொழியாக இருக்கும். இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகி வந்த துயிலறைக் காவியம் என்ற நிகழ்த்து அந்த நிகழ்ச்சியை எழுதுபவரைவிட இசைப்பிரியாவின் குரலையே அதிகமாய் நினைவுபடுத்துகிறது. மிக இயல்பான எதார்த்தமான நவீனத் தன்மை மிக்க வாசிப்பும் குரலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பெறுமதியாக்கியது.
இசைப்பிரியாவின் குரலில் ஒலித்த அந்த ‘துயிலறைக்காவியம்’ என்ற நிகழ்ச்சி மாவீரர்களைப் பற்றியது. துயிலறைக்கடிதங்கள் போல கடித அமைப்பில் உருவாக்கப்படும். மாவீரர் ஒருவரது வரலாறு குறித்து பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியில் மாவீரர்களைப் பற்றி அவர்களது பெற்றோர் நண்பர்கள், சகபோராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், தலைவர் என அனைவரும் சாட்சியமாக பதிவு செய்வார்கள். செவ்வாய்கிழமைகளில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். ஈழக் கனவுக்காக போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலியாகவும் பதிவாகவும் நினைவுபடுத்தலாகவும் முக்கியம் பெறும் அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் மிகத் தனித்துவமாக ஒலித்திருக்கிறது.
கவிதைகளை விபரணச் சித்திரங்களாக்குகிற வேலைகளில் அவர் ஈடுபட்டார். புதுவை இரத்தினதுரை, செந்தோழன், ஆதிலட்சுமி சிவகுமார், வீர போன்றவர்களின் கவிதைகளை இப்பிடி விவரணங்களாக்கியிருக்கிறார். என்னிடமும் கவிதை ஒன்றை கேட்டார். தருகிறேன் என்று சொல்லி வாரக் கணக்காகி மாதக் கணக்கில் காலம் நீண்டு கொண்டு போனது. ‘தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவிங்களே?’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டபார். இசைப்பிரியாவைக் காணும் பொழுதுதெல்லாம் ‘எழுதித் தருகிறேன் எழுதித் தருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் நீளமாக அன்றைய சூழலை வைத்து ஒரு பிரதி எழுதிக் கொடுத்தேன். சில நாட்களில் அதற்கு குரல் கொடுத்து படத் தொகுப்பாக்கம் செய்திருந்தார்.
தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல வேலைகளை செய்திருக்கிறார். வெறுமனே குரல் கொடுப்பதற்கு அப்பால் அவற்றை படத் தொகுப்பு செய்வது, படைப்பது, பிரதிகளை எழுதுவது, காட்சிப் பிடிப்புக்களை இயக்குவது, காட்சிகளை தேடிப் பெறுவது, கமராக்களை கையாள்வது என எல்லாத் துறையிலும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் இயங்கினார். நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அவர் வளர்ச்சி பெற்று வந்தார். படத்தொகுப்பாக்கம் செய்வது போன்ற கணினி ரீதியான அறிவை பெற்றுக் கொள்ள இசைப்பிரியாவிடம் இருந்த ஆர்வமே முக்கிய காரணம். அன்றைய நாட்களில் பெண் படைப்பாளிகளின் தொலைக்காட்சித் தயாரிப்புக்கள்தான் மிகச் சிறந்தவை என்கிற அளவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதற்குள் இசைப் பிரியா போன்ற ஊடகப் போராளிகளின் அர்பணிப்பும் இலட்சியப் பாங்கும் கொண்ட பணிதான் காரணமாக இருந்தது.
செய்தித் தொகுப்பாளராகவும் செய்தி எழுதுபவராகவும் பணியாற்றிய இசைப்பிரியா உதிரிகளாக பல நிகழ்ச்சிகளுக்கு குரல் வழங்கியிருக்கிறார். நடனத்திறமையும் கொண்டவர். நேர்காணல்களிலும் ஈடுபட்டிருக்கிறார். கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் ‘சாலை வழியே’ என்ற அபிப்பிராய நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறார். ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற குறும்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இசைப்பிரியாவை அதிகம் வெளி உலகிற்கு அல்லது ஈழத் தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டியவை அவரது முகம், குரல், நடிப்பு என்பனவைதான். தொலைக்காட்சியில் ஆவண வீடியோத் தொகுப்பில் அவர் அறிவிப்பாளராக படைப்பாளியாக இருந்து செம்மையாக இயங்கியதுடன் ஈழப் படங்களிலும் பாடல்களிலும் நடித்த பொழுது அவர் இன்னும் பேசப்பட்டார். இசைப்பிரியா பெரும்பாலான ஈழப்பெண்களின் முகபாவமும் மனமும் கொண்டவர். அவரது நடிப்புக்களில் அந்தத் தன்மைகள் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கிடக்கும். இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற நீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் முக்கியமானது.
ஈரத்தி படத்தில் முழுக்க முழுக்க ஈழத்து சாதாரண பெண்ணைப்போல வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற குணங்களை மிக இயல்பாக பிரதிபலித்திருப்பார். அந்தப் படத்தில் இவரது சகோதரியாக வருகிற போராளியுடனான உரையாடல்கள், தம்பியாக வருகிற பாத்திரத்துடனான உரையாடல்கள், அம்மாவுடனான உரையாடல்கள், காதலனுடனான உரையாடல்கள் என்பன மனதை விட்டகலாது நிற்கின்றன. ஈரத்தி படம் பலவகையிலும் முக்கியமான படம் என்று அந்தப் படம் வெளியாகிய நாட்களில் எழுதிய குறிப்பில் எழுதியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்பு செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அத்தோடு படத்தின் சிறப்புக்கு இசைப்பிரியா போன்ற போராளிகளின் நடிப்பும் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.
இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே என்னை அதிகம் பாதித்த படம். அந்தப் படத்தையும் முல்லை யேசுதாசனின் ‘துடுப்பு’ படத்தையும் குறித்து இரண்டு பெண்ணியக் குறும்படங்கள் என்று வீரகேரிப் பத்திரிகையின் நிறப்பிரிகை பகுதியில் எழுதியிருந்தேன். அதைப் பார்த்த இசைப்பிரியா ‘எங்கட படத்தைப் பற்றி வீரகேரியில எழுதியிருந்தியள் நன்றி’ என்றார். ‘நல்லா இருந்தது சந்தோசமாயிருந்தது. நிமலாக்கவும் சொல்லச் சொன்னவா’ என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். வேலி படத்தில் இசைப்பிரியாவின் லட்சுமி என்ற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை எடுத்துப் பேசுபவை.
வேலி படத்தில் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தில் இசைப்பிரியா நடித்தார். இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்கு காணி பார்க்கச் சென்ற கணவனை இராணுவம் கொலை செய்து மலக்குழிக்குள் போட்டுவிட எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி விடுகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து வாழும் பொழுது ஏற்படும் சமூக ஊடாட்டங்களே தொடர்ந்து கதையாகிச் செல்கிறது. யுத்தம் காரணமாக கணவர்களை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் பெண்களின் குறியீடாக வருகிறார் இசைப்பிரியா. வசனங்களை பேசும் விதமும் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டும் விதமும் ஈழப் பெண்களின் நிகழ்கால உணர்வை காட்டுகின்றன. ஈழப் பெண்களுக்கேயுரிய வலிமையையும் மிடுக்கையும்கூட இந்தப் படத்தில் இசைப்பிரியா அதிகம் வெளிக்காட்டுவார். அந்தப் படத்தில் வரும் இசைப்பிரியா போன்ற பாத்திரம் வகிக்கிற பல பெண்களை நான் பார்த்திருக்கிறேன். சமூகத்தின் வசைகளுக்கும் பழிப்புக்களுக்கும் எதிராக கடுமையாக போராடுகிறார்கள்.
வேலி படத்தில் அகழ்விழி என்ற பெண் போராளியின் கமராவில் இசைப்பிரியா மிகவும் அழகாக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறார். ஈழத்தின் அழகி என்கிற அளவில் அவரை காட்டுகிற கோணங்களும் அளவுகளும் அமைந்திருக்கின்றன. இயல்பாக பாத்திரங்களுக்கு ஏற்ப அதன் உணர்வுகளை பிரதிபலித்து வாழ்பவர் இசைப்பிரியா. இப்பிடி இசைப்பிரியா ஒரு ஊடகப் போராளியாக பல வகையில் முக்கியம் பெற்றிருக்கிறார். பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். கனவுக்காக இலட்சியத்திற்காக ஊடகப் பிரிவில் முழுமையாக இயங்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
சரி, பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் தன்மையும் நறுக்கென்று எதனையும் மனந்திறந்து பேசும் தன்மையும், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தன்மையும் இசைப்பிரியாவின் இயல்புகள் என்று என்னிடம் சொல்லிய முன்னாள் பெண்போராளி ஒருவர் எல்லோரையும் மதித்து நடந்து கொள்வதும், தனது கடமைகளில் கண்ணாக இருப்பதும் அவரது இயல்புகள் என்றும் குறிப்பிட்டார். இலட்சியத்தில் கொள்கையில் கனவில் புரிதலும் குளிர்ச்சியும் வலுவும் கொண்டவர் இசைப்பிரியா.
வன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்திருக்கிறது; வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார். இசைப்பிரியாவுடன் அவரது கருப்பையில் இருந்த குழந்தையையும் அவர்கள் கொன்றிருக்கிறார்கள். பல ஈழப் பெண்களுக்கு நடந்த துயரக் கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்திருக்கிறது. அது போல பல ஆண் போராளிகளும் பொதுமக்களும் இப்பிடி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்ட்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளின் பின்னர் சரணடைந்த பல போராளிகள் இப்படி வதைக்களத்தில் கொல்லப்பட்டனர். மிகவும் பரிதாபகரமாக இரக்கமற்ற வகையில் சரணடைந்த போராளிகளை கொன்ற குருதியால் நமது நிலம் நனைந்து சிவந்து போயிருந்தது.
எல்லாச் சாபங்களும் எல்லாக் கண்ணீரும் எல்லா குருதிகளும் மகிந்த ராஜபக்ஷவை பாவமாக தொடர்கிறது. இந்த ஈழத் துயரம் மகிந்த மற்றும் அவரது வாரிசுகள் முதல் அவரது படைகள் வரை சந்ததிகளைக் கடந்து பழி தீர்க்கிற கொடும் சாபமாகி விட்டது. எல்லா விதமான அநீதிகளைக் கண்டும் ஈழத் தாய்மார்கள் நெஞ்சில் அடித்து அழுது திட்டினர். மகிந்தராஜபக்ஷ ஈழப் போராளிகளுடன் நடத்தியது நேரடியான போர் அல்ல என்பதையும் தந்திரம் நிறைந்த பல வழிகளில் போராளிகளை அழித்து ஈழப் போராட்டத்தை முடக்க பல குற்றங்களை இழைத்துள்ளார் என்பதும் ஈழத் தமிழர்களின் இருப்பையும் பிரக்ஞையும் இல்லாமல் செய்ய முற்பட்ட கொடுங்கோல் வேலை என்பதையும் குருதியால் நனைந்த ஈழ நிலம் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
– தீபச்செல்வன் ( deebachelvan@gmail.com)

No comments

Powered by Blogger.