கண்ணூரில் புதிய விமான நிலையம்

சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில், 1,800 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்ட கண்ணூர்
விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனைத் தொடர்ந்து கண்ணூரிலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று நெடுநாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் டாட்டா நிறுவனத்தின் சார்பில் கண்ணூருக்கு உள்நாட்டுப் பயணிகள் விமானங்கள் வந்து சென்றதுண்டு . இதனைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, 2008ஆம் ஆண்டு இங்கு சர்வதேச விமான நிலையம் அமைவதற்கு அனுமதியளித்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
இதன்பின், 2010ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இதனைத் தொடங்கிவைத்தார். இதற்காக, மாட்டானூர் பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலையம் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக சுமார் 1,800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விமான நிலையமானது தினமும் 2,000 பயணிகளையும், ஓராண்டில் 15 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று (டிசம்பர் 9) கண்ணூரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் சமூகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஏர் இந்தியா விமானமொன்று, இன்று காலை 9.55 மணியளவில் கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் பறந்து சென்றது. இதன் மூலமாக, ஒரே மாநிலத்தில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் பெருமையைப் பெற்றது கேரளா. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகச் செல்லலாம்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலை பக்தர்கள் வந்து செல்லும் வகையில் எரிமேலியில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
கண்ணூர் விமான நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியினை காங்கிரஸ், பாஜக கட்சிகள் புறக்கணித்துள்ளன. சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நிகழ்வில் பாஜகவினர் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் பெயர் திறப்புவிழா அழைப்பிதழில் இடம்பெறவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியினரும் இதனைப் புறக்கணித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. விமான நிலையம் கட்டும் திட்டத்தை முன்னெடுத்ததில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.
தற்போது கேரள முதலமைச்சராக இருந்துவரும் பினராயி விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக இருந்துவரும் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கட்சியில் குரல் எழுப்பியவர் அச்சுதானந்தன். இதனாலேயே, கடந்த சில ஆண்டுகளாக அவர் கட்சி நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்பதில்லை. உம்மன் சாண்டி, அச்சுதானந்தனுக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டித்து, கண்ணூர் விமான நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டவர்களில் சிலர் சில வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.