சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு: 22 பேரும் விடுவிப்பு!

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து மும்பை சிறப்பு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை என்கவுண்டர் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருக்கு லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரது கூட்டாளியான துல்சிராம் பிரஜாபதியும் 2006 ஆம் ஆண்டு குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோன்று, சொராபுதீன் மனைவி கௌசர்பியும் கொல்லப்பட்டார்.
இதில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்றும், இந்த வழக்கில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டு, அவர் உட்பட 38பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு 2010ஆம் ஆண்டு குஜராத் சிஐடி அதிகாரிகளிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத்திடம் இருந்து நீதிபதி லோயாவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த வேளையில் நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மறைவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
லோயாவின் மரணத்திற்குப் பிறகு வழக்கு நீதிபதி எம்.வி. கோசவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை 2014ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதி, சிபிஐயின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறி வழக்கில் இருந்து அமித் ஷா உட்பட 16பேரை விடுவித்தார்.
38 பேரில் 16 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 22 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
2017ஆம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்.சர்மா இவ்வழக்கில் 210 சாட்சிகள், 92 பிறழ்சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்தார் இவர்களில் பெரும்பாலானோர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளநிலை காவலர்கள் ஆவர். இவ்வழக்கு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஜே.எஸ். சர்மா தெரிவித்திருந்தார்.
நீதிபதி ஜே.எஸ். சர்மா இம்மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. "குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக எந்தவிதமான வலுவான ஆதாரங்களையும் நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டது என்பதால், அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றும் இதில் வேறு வழியில்லை என்றும் தெரிவித்த நீதிபதி, தங்கள் முன்பு வைக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படுவதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.