மலைக்குன்றில் கல்லுடைக்க மக்கள் எதிர்ப்பு!!

வவுனியா பெரிய கோமரசங்குளம் யேசுபுரம் பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பிரதேச மக்கள் குடில் ஒன்றை அமைத்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. கல்லுடைப்பதற்கு பயன்படும் வெடிபொருளில் இருந்து பரவுகின்ற நச்சுதன்மையைச் சுவாசிக்கும் போது நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. வெடிவைத்து கற்களை உடைக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் அருகில் உள்ள குளத்தின் வான்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுகின்றது. இதனால் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கபட்டுள்ளது. சிதறிவருகின்ற கற்கள் அப்பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது விழுந்து காயங்களை ஏற்படுத்துகின்றன. இரவில் வெடிசத்தங்கள் கேட்பதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கபட்டுள்ளன” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த வருடம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், மாவட்டச் செயலருக்கும் தெரியப்படுத்தினர்.

அதற்கமைய குறித்த பகுதியில் கல் உடைப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றதா என்று அதிகாரிகள் குழு ஆய்வு செய்திருந்தது. அதன் பின்னர் கல் உடைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

“ஆய்வு நடவடிக்கையின் போது சிறிய அளவிலான வெடிபொருள்களே பயன்படுத்தபட்டுள்ளன. ஆனால் தற்போது மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருள் கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மலையும், அதனை அண்டியுள்ள காணிகளும் எமது கிராமத்திற்குரியவை. அந்த வளத்தை இல்லாமல் செய்வதை நாம் விரும்பவில்லை. எனவே குறித்த மலையில் கல்லுடைக்கும் பணிக்கு முற்று முழுதாக தடை விதிக்கவேண்டும் ” என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று தெரிவிக்கபட்டமையால் கல் உடைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளபட்டது. ஆய்வுகளின் பின்னரே கல் உடைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மக்களுக்கு அவ் விடயம் தொடர்பாக அதிருப்திகள் இருக்குமாயின் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யமுடியும் ” என்று மாவட்டச் செயலர் எம். கனீபா தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.