கானகம் செய்வோம்!! கவிதை

நீயும் நானும் குழந்தையாவோம்.

வானவில்லுக்கு
வண்ணங்கள் கொடுப்போம்.
மேகப்பொதி இறக்கி
மென்லென பாவை செய்வோம்.
மயிலிறகின்
வண்ணங்கள் வாங்கி
மண்வீதியை அலங்கரிப்போம்.
குயில் பாட்டை மொழிபெயர்த்து
குருவிக்கு கற்றுக்கொடுப்போம்.
மைனாவின் பேச்சுமொழியை
மதுரமாய் பேசிக்கொள்வோம்.
குச்சிகளால் கூடமைப்போம்.
கானாங்கோழிக்கும்
கதை சொல்லி மகிழ்விப்போம்.
முயலின் பாய்ச்சலையும்
அணிலின் தாவலையும்
அளந்து வைப்போம்.
புலினிகளோடு உறவாடுவோம்.
பச்சை கிளிகளோடு
பக்கப்பாட்டு பாடுவோம்.
ஆட்காட்டிக் கேள்விக்கு
அழகாக பதில் சொல்வோம்.
பறவைகளை தாலாட்டுவோம்.
சிங்கத்தின் கர்ஜனையை
உறுமலால் அடக்கிவைப்போம்.
அது சரி
இத்தனைக்கும் காடு வேண்டும்.
வா முதலில் கானகம் செய்வோம்.
நீயும் நானும் அண்ணன் தங்கை.

கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.