``அபிஷேக் பச்சனைப் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்திருச்சு!" - கல்கி சுப்பிரமணியம்

"நான் நிறைய வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். அங்கே தமிழ்நாடு அளவுக்கு கஷ்டப்படுற மாற்றுப் பாலினத்தவர்களை இதுவரை நான் பார்த்தது இல்லைன்னு சொன்னார்."
கவிஞர், ஓவியர், நடிகை மற்றும் `சகோதரி' தொண்டு அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்ரமணியம்.
அவருடைய முகநூல் பக்கத்தில் நடிகர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து அவர் எடுத்திருந்த புகைப்படத்தைப் பதிவு செய்திருந்தார்.
அவர் பகிர்ந்துகொண்டவை,

மரியாதை நிமித்தமா நான் பண்ற ஒர்க் எல்லாத்தையும் பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம், அவங்க நடத்தின ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைச்சிருந்தாங்க. என்னுடைய விஷன் என்னன்னு தெரிஞ்சுக்கக் கூப்பிட்டிருந்தாங்க. அந்த நிகழ்ச்சிக்கு அபிஷேக் பச்சனையும் அவங்க அழைச்சிருக்காங்க. இந்த நிகழ்ச்சி மும்பையில் நடந்துச்சு. அங்கேதான் நாங்க ரெண்டு பேரும் சந்திச்சோம். அபிஷேக் பச்சன் ஜென்டில் மேன்! அவ்வளவு எளிமையா என்கிட்டப் பேசினார். அவர் என்னுடைய வேலைகளை எல்லாம் தொடர்ந்து பார்த்திருக்கிறார். அது குறித்து பேச ஆரம்பிச்சோம். பேசும் போது அவ்வளவு மரியாதையாப் பேசினார். அதுமட்டுமல்லாம நான் பண்ற வேலையை மனசுவிட்டுப் பாராட்டினார். நீங்க ரொம்பக் கடினமா உழைக்கிறீங்க... இவ்வளவு தூரம் கடந்து வந்துட்டீங்க... இன்னும் நீங்க போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு. எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நல்ல முறையில் அமைதியாச் செயல்படுங்கன்னு சொன்னார்.

சமூகப் பணி செய்யும் போது நிறைய நேரம் தளர்ந்திடுவோம். பலவிதமான ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியான சமயத்தில் நம்மளை உற்சாகப்படுத்துற விதமா சில பிரபலங்கள் பாராட்டும்போது அது மிகப்பெரிய உந்துதலா இருக்கும். என்னுடைய கனவு நாயகன் அபிஷேக் பச்சன். எனக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர். அவர் என் வேலையைப் பாராட்டி என்னை உற்சாகப்படுத்தினது ரொம்பவே ஸ்பெஷலான தருணம்! அவர் முகத்தைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு வெட்கமா இருந்துச்சு. நமக்குப் பிடிச்ச நடிகர் இவ்வளவு கேஷூவலா நம்மகிட்டபேசுறாரேன்னு ஆச்சர்யம்! ரொம்ப ஆர்வமா பலவிஷயங்கள் என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டாரு.

இன்னும் பத்து வருஷத்துக்குள்ள திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவாங்கங்குறதை மாற்றி அவங்க எல்லோரையும் தொழில் முனைவோர்களாக உருவாக்கணும். எல்லா விதமான தளங்களிலும் மாற்றுப் பாலினத்தவர்களை பணிக்கு அமர்த்தணும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுட்டு இருக்கேங்குறதை அவர்கிட்ட சொன்னேன். இதுக்கெல்லாம் என்ன காரணம். நம்மளுடைய நாட்டில் மாற்றுப் பாலினத்தவர்களை ஏன் ஒதுக்குறாங்கன்னு கேட்டார். அதுமட்டுமல்லாமல், நான் நிறைய வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். அங்கே இந்தியா அளவுக்கு கஷ்டப்படுற மாற்றுப் பாலினத்தவர்களை இதுவரை நான் பார்த்தது இல்லைன்னு சொன்னார். அதுக்கு, இங்கே பெரும்பாலும் பெற்றோர்கள் மாற்றுப்பாலினத்தவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அவங்களுடைய சப்போர்ட் இல்லாததும் ஒரு காரணம்! கைதூக்கி விட சப்போர்ட்டா யாராச்சும் இருந்தாங்கன்னா இந்தியாவிலும் திருநங்கைகள் நல்லா வாழ முடியும்னு சொன்னேன். அதுக்கு, பெற்றோர்களே அவங்களுடைய குழந்தைங்களைப் புறக்கணிக்கிறாங்கங்குறதை கேட்கவே வருத்தமா இருக்குன்னு சொன்னாரு. மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றி பல விஷயங்களை என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டார்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். அவருக்கு என்னுடைய ஓவியங்கள் எல்லாம் ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் ஆர்ட்டிஸ்ட்னு சொல்லவும் அவர் ஷாக் ஆகிட்டார். கலைகள் மீது அவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு இருக்கிறதாம். ஓவியங்கள் மீது பிரியம் அதிகமாம்! என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துல இருந்த ஓவியங்கள் எல்லாத்தையும் அவர்கிட்ட காட்டினேன். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல நான் பார்த்த எக்ஸ்பிரஷன்களை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது! எனப் புன்னகைக்கிறார், கல்கி சுப்பிரமணியம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.