மாணவர் சிப்பாய் அணியை ஆயுத குழுவாக சித்தரிக்க வேண்டாம்!

 முஸ்லிம் மாணவர்கள் கைகளில் ஆயுதங்கள் என்ற பல்வேறு கருத்து மோதல்கள் தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் பல்வேறு வாதபிரதிவாதங்ளை முன்வைத்து சமூகத்தில் பல்வேறு பிரிவினைவாத கருத்தை உணர்ச்சியூட்டும் வகையில் பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக 40க்கு மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் கற்பிக்கும் தேசிய
பாடசாலையான மட் / மம/காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடந்த 08/02/2019 வெள்ளிக்கிழமை இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவர் சிப்பாய் அணி ஆயுதம் தாங்கி கிழக்கு மாகாண ஆளுனருக்கான வரவேற்பினை நிகழ்த்தினர். இது தொடர்பாக எனது கருத்தை முன்வைக்கலாம் என்று இதனை பதிவிடுகிறேன். இது குறித்து விமர்சனங்களை முன்வைப்போர் என் சுயம் தொடர்பில் நடுநிலை நக்கி, முஸ்லிம்களுக்கு சோரம் போனவன், தமிழின துரோகி என்று விமர்சனங்களை முன்வைத்தாலும். தமிழன் என்ற ரீதியில் எம் சமூகத்திக்கு பல முன்னேற்றகரமான பாதைகளையும், எம் சமூகத்தின் பின்னடைவுக்கான காரணத்தை ஆராய்ந்து அவற்றில் தேங்கிக் கிடக்காது முன்நகரக வேண்டும் என்ற எண்ணப்பாடு கொண்டவன் என்பதால் இப்பதிவையிட வேண்டும் என்று சிந்தித்து பதிவிடுகிறேன்.
அன்பான தமிழ், முஸ்லிம் சகோதர, சகோதரிகளே கடந்த 08/02/2019 வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் இறுதி நாள் அன்று பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் வருகைதந்தார்
அவரை வரவேற்பு செய்யும் முகமாக செங்கம்பள வரவேற்புடன் காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர் மேலைத்தேய வாத்திய வரவேற்பும் மாணவர் சிப்பாய்கள் அணி வரவேற்பும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. இதில் மாணவர் சிப்பாய் அணியினர் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயிற்சிகளை பெற்று இருந்தனர் இதன் விளைவாகவே மாணவர் சிப்பாய் அணியினர் ஆயுதம் தாங்கியவாறு கிழக்கு ஆளுனரை வரவேற்பு செய்தார்கள் .தவிர ஆயுதம் ஏந்திய குழுவாகவோ, தனிப்பட்ட ரீதியில் சட்டத்திற்கு முரணாக செயற்படவில்லை ஆனாலும் இங்கு மாணவர் சிப்பாய்கள் வைத்திருந்த ஆயுதங்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரின் அனுமதியோடு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்விற்கு மாத்திரம் வழங்கப்பட்டு மீண்டும் நிகழ்வு முடிந்த அடுத்த நிமிடத்தோடு ஆயுதங்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது உண்மை. இதில் எல்லோருக்கும் சந்தேகம் 
இவர்கள் எப்படி ஆயுத பயிற்சி பெற்றார்கள் என்று மரப்பலகையினால் செய்த ஆயுத மாதிரியைக் கொண்டே பயிற்சிகள் பெற்றார்கள் என்பது உண்மை. ஆனாலும் தமிழ் சகோதரர்கள் கிழக்கு ஆளுனரின் கடந்த காலத்தில் ஊடகங்களினால் வெளிப்படுத்தப்பட்ட செய்திகளின் வெளிப்பாட்டுக்கு அமைவாகவும். அவரது தான்தோன்றிதனமான செயற்பாடுகளின் விளைவாக ஊடகங்களுக்குஅவர் கொடுத்த பேட்டியின் Video காட்சியினை
ஆதாரமாக கொண்டு அல்லது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவோ மாணவர் சிப்பாய் அணியினரையோ அல்லது காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். காரணம் இது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான தலைமைத்துவ பண்புகளோடு தொடர்பான பயிற்சிகளை உள்ளடக்கியதாகவே மாணவர் சிப்பாய்கள் அணியினரின் செயற்திட்டம் அமைந்துள்ளது. உதாரணமாக கடந்த காலத்தில் இதே பயிற்சிகள் பட்டதாரிகளுக்கும் தலைமைத்துவ பயிற்சி என்ற ரீதியில் நடைபெற்றதுதான். அதே நேரம் பல்கலைகழகத்திக்கு தெரிவான மாணவர்களுக்கும் நடைபெற்றது. அதே நேரம் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குமான பயிற்சிகளும் நடைபெற்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனாலும் மாணவர் சிப்பாய் அணியில் முஸ்லிம் மாணவர்கள் மாத்திரம் உள்வாங்கப்படவில்லை தமிழ், சிங்கள மாணவர்களுமே இந்த மாணவர் சிப்பாய் அணியில் பங்கேற்று வருகின்றார்கள்.
எனவே காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர் சிப்பாய் அணி இஸ்லாமிய பயங்கரவாத ஆயுதக்குழு மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆயுதக்குழுவு என்று பொய்யான கருத்தை முன்வைக்க வேண்டாம் ஒருவேளை உங்கள் உணர்ச்சியூட்டும் கருத்துக்கள் முஸ்லிம் மாணவர்களை உங்களுக்கு எதிரான ஆயுதக்குழுவாக பரிணாமம் அடைய வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடும். இது கிழக்கில் இனங்களுக்கிடையே ஆயுத கலாச்சாரத்தை தோற்றிவித்து விடும். தயவு செய்து நாம் முன்வைக்கும் கருத்துக்கள் எம் சமூகத்தினை முன்னேற்றம் காணவைக்க வேண்டும் தவிர இன்னும் இன்னும் உணர்ச்சிவசப்படுத்தி பின்னோக்கி செல்ல வைக்ககூடாது. காரணம் தமிழர்கள் நாற்பது வருடங்கள் இனத்தின் விடுதலைக்காக அகிம்சை வழி போராட்டம், ஆயுதப்போராட்டம், அரசியல் போராட்டம் என்று பல்வேறு வழிகளிலும் எம் கூட இருந்து குழிதோண்டிய துரோகிகளாலும் சர்வதேச அரசியலாலும் பல்வேறு அழிவுகளையும், உடமைகளையும், ஆளுமைமிக்க போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், எம் உறவுகளையும் இழந்துள்ளோம் ஏன் தமிழினத்தின் தன்மான தலைவனை கூட இழந்துவிட்டோம் ஏன் இனியும் தமிழனை உணர்ச்சியூட்டி இருக்கிற எம்சந்ததியையும் ஆயுத கலாச்சாரத்திற்கும், அடிமை வாழ்க்கைக்கும் இட்டுசெல்ல வேண்டும்? இந்த ஸ்ரீலங்கா தீவில் தமிழினம் தலைத்தோங்க வேண்டுமாயின் எம் சமூகம் தனக்கான கல்வி, பொருளாதாரம், அரசியலை நவீன உலகிக்கு ஏற்ப விருத்தி செய்ய வேண்டும் தவிர இன்னொரு சமூகத்தின் விருத்தியையும், அபிவிருத்தியையும் பார்த்து ஏளனம் செய்து கொண்டு இருக்கும் சமூகமாக இருக்ககூடாது. அப்போதுதான் நாம் இந்த தீவில் எமக்கான உரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளில் பல வேலைவாய்ப்புக்கள் உள்ளன அவை எம்மவருக்கு தெரியாது உதாரணமாக அரச தொழில் செய்யும் ஒருவர் பாதுகாப்பு அமைச்சியின் கீழும் வேலை செய்ய முடியும் ஆனால் இதில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவு காரணம் இது தொடர்பான தேடல்களும் அனுகுமுறைகளும் தமிழருக்கு கிடைப்பதில்லை முப்பது வருட ஆயுத போராட்டத்தின் பாதிப்பும், தமிழன், சிங்களவன் என்ற குரோத பார்வையும்மே ஆகும். அப்படியிருந்து தமிழ் ஆசிரியர் ஒருத்தர் இரண்டு நட்சத்திரம் பெற்று பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகணத்தில் மாணவர் சிப்பாய் அணிகளுக்கு பயிற்சிகள் வழங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளார் என்றால் தமிழனுக்கு சிறப்பாகும்.
எனவே தயவு செய்து தமிழர்கள் நம் சமூகத்தை முன்னேற்ற சகலதுறைகளிலும் பங்கேற்று வெற்றிவாகை சூட்ட வேண்டும். எனவே போலி தேசியவாத சிந்தனைகளையும், நம் ஆளுமையற்ற அரசியல்வாதிகளின் பின் செல்வதையும் தவிர்த்து தனக்கான தன் இனத்திக்கான உரிமை, சுதந்திரத்தை பெற்றெடுக்கும் வழியில் முன்னேறி செல்ல வேண்டும்.
நன்றி.
ஜீ.ஜெ.பிரகாஸ்

No comments

Powered by Blogger.