தமிழர்களின் தொன்மைமிகு அடையாளம்-திருகோணமலை லிங்கபுரம் திருமங்களாய் சிவன் ஆலயம்!

அழிவடைந்த புராதன இந்து ஆலயம் ஒன்றின் புகைப்படமொன்று, சேருவிலைச் சேர்ந்த ஒருவரால் யாழ். பிராந்திய தொல்லியற் திணைக்கள அதிகாரி திரு. மணிமாறன் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அப்புகைப்படத்தை அவதானித்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் (தொல்லியல் இணைப்பாளர் - யாழ்ப்பாணம் மற்றும் தலைவர், வரலாற்றுத்துறை - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களால் ஆலயத்தின் வடிவமைப்பு, அதன் கலைமரபு ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.


அவ்வாலயம் பொலநறுவை இரண்டாம் சிவதேவாலயத்தை அவருக்கு நினைவுபடுத்தியதால், அவ்வாலயத்தைப் நேரில் சென்று பார்க்க அவர் முடிவு செய்தார். அதன் பலனாகக் கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் சிறப்புப் பிரிவு மாணவர்களுடன், பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்கள், திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிளிவெட்டியில் இருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லிங்கபுரம் - திருமங்களாய் காட்டுப் பகுதிக்கு கள ஆய்வுகளுக்காகச் சென்றிருந்தார். அக்கள ஆய்வுகளின்போது பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களால், திருமங்களாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் உள்ள சிவன் ஆலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து கல்வெட்டுக்களில் மூன்று கல்வெட்டுக்கள் கி.பி. 10 ஆம் - 11 ஆம் நூற்றாண்டையும், ஏனைய இரண்டு கல்வெட்டுக்கள் கி.பி. 14 ஆம் - 15 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிந்ததாக பேராசிரியர்  ப.புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். குறித்த காலக் கணிப்பை இந்தியாவின் தலை சிறந்த கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் வை.சுப்பறாயலு, பேராசிரியர் இராஜவேலு மற்றும் கலாநிதி இரகுபதி ஆகியோரும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயங்கள்  சக்தி வானொலி – தொலைக்காட்சி மற்றும் சக்தி செய்திகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன.  மேலும் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களால் குறித்த கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்களையும்  சக்தி பண்பலை ஊடாக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த அழிவடைந்த புராதன சிவன் ஆலயம்  அமைந்திருந்த இடத்திற்கு பேராசிரியர்  ப.புஷ்பரட்ணம் மற்றும் தொல்லியல் மாணவர்கள் ஆகியோரை அழைத்துச் சென்று, நிகழ்ச்சியொன்றை ஒலிப்பதிவு செய்வதற்கு சக்தி வானொலியின் 'வணக்கம் தாயகம்' நிகழ்ச்சி பெருவிருப்பம் கொண்டது. இவ்விடயம் தொடர்பாக  பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்அவர்களுடன் நாம் தொடர்பு கொண்டதுடன், அவர் எமது விண்ணப்பத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

குறித்த பிரதேசம் செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக விளங்கியதுடன், அவ்விடம் முன்னர் திருமங்களாய் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால், ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் தற்போது பெருங்காடாகவே காணப்படுகிறது. அதிலும் 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழர்களின் புராதன வாழ்விடமாக இருந்த திருமங்களாய் கிராமத்துடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டு, அக்கிராமம் காடுகளால் சூழப்பட்டது.

மாலை மூன்று மணிக்குப் பின்னர் இப்பிரதேசத்தில் யானைகளின் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் சக்தியின் வணக்கம் தாயகம் குழுவினருடன் எமது பயணம் ஆரம்பமானது. திருகோணமலை – லிங்கபுரம் பகுதியில் இருந்து வாகனத்தில் பயணித்த எமக்குக் கிட்டத்தட்ட 4 – 5 கிலோ மீற்றர் தூரம், அதாவது காட்டுப் பிரதேசம் ஆரம்பமாகும் வரை மாத்திரவே வாகனத்தில் பயணிக்க முடிந்தது.

நெருக்கமாக இருந்த குடியிருப்புகள் குறைவடைந்து, காட்டுப் பிரதேசம் ஆரம்பமானது. சன நடமாட்டம் அற்ற காட்டுப் பகுதியின் ஆரம்பமும், ஊருக்குள் அத்துமீறும் யானைகளுக்காகப் போடப்பட்ட மின்சார வேலியும் எமது கண்களுக்கு சற்று பயத்தைக் கொடுத்தது. எமக்கு முன்பாகவே பேராசிரியர்  ப.புஷ்பரட்ணம் மற்றும் தொல்லியல்துறை மாணவர்கள் அங்கு சென்றிருந்தனர். எமக்கு வழிகாட்டுவதற்காக வந்த ஊரவருடன்,  பேராசிரியர்  ப.புஷ்பரட்ணம் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வரும்வரை நாம் கொஞ்சம் பயத்தோடும் படபடப்போடும் காத்திருந்தோம்.

உழவு இயந்திரத்ததைச் செலுத்தி வந்த ஊரவரான இளைஞனுடன், நான்கு வாண்டுகளும் முன்புறம் அமர்ந்திருந்ததைப் பார்த்த எமக்கு சற்று பயம் விலகியது. அடர்ந்த காட்டுக்குள் ஊரவர்களால் பெக்கோ இயந்திரம் கொண்டு உருவாக்கப்பட்ட பாதையில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பயணித்தோம். அக்காட்டுக்குள் யானைகள் மிகவும் சர்வதாரணமாக வந்து செல்வதற்கான அடையாளங்கள் எமது கண்களுக்குத் தப்பவில்லை. மிகவும் கடினமான காட்டுப் பாதையில், மிகுந்த  சிரமங்களுக்கு மத்தியில் பயணப்பட்ட எமக்கு கண்களுக்கு சிதைவடைந்த கோயில் அமைந்திருந்த பகுதி தென்பட்டது.

இங்கு அடிக்கடி வந்து செல்லும் ஊரவர்களால் கோயிலுக்கு முன்புறமாக இருந்த கிணறு சுத்தப்படுத்தி, இறைக்கப்பட்டிருந்ததுடன், தொல்லியல் மாணவர்களில் சிலர் தாம் கொண்டு வந்த சமையல் பொருட்களைக் கொண்டு மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஏனைய தொல்லியல்துறை மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் ஆகியோர் இணைந்து கோயிலை சுத்தப்படுத்தி, சிவனுக்கு பூசை செய்திருந்தார்கள்.

கோயிலுக்குச் சென்ற வணக்கம் தாயகம் குழுவினரான  கணா மற்றும் பிருந்தகனையும் என்னையும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தொல்லியற் திணைக்கள அதிகாரிகளான திரு.மணிமாறான், திரு.கபிலன் ஆகியோர், தொல்லியல்துறை மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் மிகவும் அன்போடு வரவேற்று, ஆலயம் தொடர்பான பல புராதன வரலாற்று விடயங்களைத் தெளிவுபடுத்தினார்கள்.

நட்டநடுக் காட்டில், சோலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த அழிவடைந்த புராதன இந்து ஆலயத்தைப் பார்த்தபோது, நாம் எம்மை மறந்தோம். பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் மற்றும் அவரது குழுவினர் அன்றைய தினம் அவ்விடத்தில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டதுடன், குறித்த கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. குறித்த மிகப் பழமை வாய்ந்த இந்து ஆலயம் அழிவடைந்து, அவற்றின் பெரும்பாகங்கள்  மண்ணுக்குள் புதைந்தும், மறைந்தும் இருந்ததை எம்மால் காண முடிந்தது.

கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்டுள்ள இவ்வாலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில்கள், சுற்றுமதில் என்பன கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்பதை ஆலயத்தின் நாலா புறத்திலும் உள்ள அழிவடைந்த அத்திவாரங்கள், கருங்கற்தூண்கள், செங்கற்கள் என்பன உறுதி செய்கின்றன. கர்ப்பகிருகமும், அதன் மேலமைந்த விமானமும் முற்றாகச் சிதைவடைந்துள்ளதுடன், தற்போது அவ்விடத்தில் சிறு மேடு காணப்படுகிறது. கர்ப்பக்கிருகத்துடன் இணைந்திருந்த கோமுகியைத் தவிர அங்கிருந்த பீடங்களோ, தெய்வச்சிலைகளோ, செப்புத்திருமேனிகளோ அல்லது சிற்பங்களையோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாலயத்தின் அமைப்பு, கலைமரபு, தூண்களின் வடிவமைப்பு பொலநறுவை சிவதேவாலயத்தை நினைவுபடுத்தினாலும் தோற்றத்தில் இவ்வாலயம் மிகப் பெரியதென்பதை நிச்சயப்படுத்த முடிவதாக பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் குறிப்பிட்டார்.

மேலும் 35 மீற்றர் நீளத்துடனும், 23 மீற்றர் அகலத்துடனும், இருபுறமும் 90 சென்ரிமீற்றர் அகலமான செங்கற் சுவரைக் கொண்டும் குறித்த ஆலயம் அமைந்திருந்திருக்க வேண்டும். கர்ப்பக்கிரகமானது தலா 2 மீற்றர் நீள அகலத்துடன் அமைந்திருந்ததுடன், கர்ப்பக்கிரகத்திற்குப் பின்புறமாக இன்னுமொரு ஆலயத்திற்கு உரிய கட்டட எச்சங்கள் காணப்படுகின்றன. ஆயினும் அவை தொடர்பாக தற்போது எதனையும் முழுமையாகக் குறிப்பிட முடியாது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

மேலும் இரண்டு வகையான செங்கற்கள் கொண்டு ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 22 சென்ரிமீற்றர் நீளமும் 13 சென்ரிமீற்றர் அகலமும் 4.5 சென்ரிமீற்றர் தடிப்பும் கொண்டமைந்த ஒருவகையான செங்கற்களும், 30 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் 4 சென்ரிமீற்றர் தடிப்புப் கொண்ட  செங்கற்களுமே அவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாலயத்திற்கு உரிய தீர்த்தக் கிணறு 3.5 மீற்றர் விட்டத்துடன் சதுர வடிவில், கீழ்ப்பகுதி அழிவடைந்த நிலையிலும் மேற்பகுதி அழிவடையாத நிலையிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான செங்கற்களைக் கொண்டு, பாரம்பரிய கட்டடக்கலைகளில் உறுதியைப் பேணுவதற்காக கட்டப்படும் கொழுவல் கட்டடக்கலை முறையில் குறித்த தீர்தத்க் கிணறு கட்டப்பட்டுள்ளமாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாலயத்திற்கு உரிய கருங்கற்தூண்கள் ஓடுகள் மற்றும் செங்கட்டிகள் ஆகியன ஆலயச் சுற்றாடலில் ஆங்காங்கே சிதறிக் காணப்படுவதுடன், பல கருங்கற்தூண்கள் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்றன. அவற்றுள் இருந்து இதுவரை ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடங்களில் இருந்து மேலும் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக பேராசிரியர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிராமத்து இளையோர்களிடம் இப்புராதன ஆலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, அவர்கள் முன்னின்று பல வேலைகளை முன்னெடுத்து வருவது பாரட்டுக்கு உரியது. காரணம் என்னவெனில், எமது இனத்தின் வரலாற்றையும், தொன்மையையும் பேணிப் பாதுகாப்பதற்கு குறித்த கிராமத்து இளையோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அப்பிரதேசத்தில் உள்ள கல்வெட்டுக்கள் தமிழர் வரலாறு, தமிழர் மதம் பற்றிய ஆய்வில் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாக விளங்கும் என்பது உறுதியாகும்.

குறித்த கல்வெட்டுக்கள் முழுமையாக வாசித்து முடிக்கும் கட்டத்தில் இங்குள்ள ஆலயம் முதல் மூன்று கல்வெட்டுக்களின் காலத்தில் இலங்கையில் ஆட்சியிலிருந்த சோழ ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதா? அல்லது அவர்கள் ஆட்சிக்கு முன்பின்னாக அல்லது சோழர் ஆட்சியில் இங்கிருந்த தமிழர்களால் கட்டப்பட்டதா? என்ற உண்மை தெரிய வரும். இருப்பினும் இக்கல்வெட்டுக்களின் சில பாகங்கள் சிதைவடைந்து இருப்பதால் இவற்றை வாசித்து முடிக்க கால அவகாசமும், புலமையாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

இருப்பினும் வேறுபட்ட காலங்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நீண்ட வரலாறு இருப்பது தெரிகிறது. இதற்கு திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்கள் பற்றி கூறும் தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் இவ்வாலயம் பற்றிக் கூறியிருப்பது இதன் பழமைக்கு மேலும் சான்றாகும்.

இவ்வாலயம் அமைந்திருக்கும் திருமங்களாய் பிரதேசத்தில் பண்டு தொட்டு வாழ்ந்த பரம்பரையின் தற்கால வழித்தோன்றல்களான திரு. வி.முத்துலிங்கம் (தலைவர்), திரு.கே.குரேந்திரராசா (செயலாளர்), திரு. கே. மாணிக்கராசா (பொருளாளர்) ஆகியோர் இணைந்து திருமங்களாய் திருக்கரையைப்பதி சிவன் பரிபாலன சபையை ஏற்படுத்தி அதனுடாக சமகால சமாதான சூழ்நிலையில் இவ்வாலயத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு அரும்பாடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சி வெற்றியடைய இலங்கைத் தொல்லியற் திணைக்களமும், மத்திய கலாசாரநிதியமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்புகிறோம் என பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் குறிப்பிட்டார்.

மேலும் எமது பிரதேசத்தில் அமைந்துள்ள மரபுரிமைச் சின்னங்கள் மீதும், இப்புராதன ஆலயம் தொடர்பாகவும் ஆர்வமும் விழிப்புணர்வும் பொது மக்களிடமும், திணைக்கள அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் அமைச்சர்கள் ஆகியோரிடம் சென்று சேர வேண்டும். அப்பணியை செவ்வனே செய்து முடிக்கும் பொருட்டு கரம் கோர்த்துள்ள சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக, தொல்லியல் மாணவர்கள் பெரும் உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஆலயம் தொடர்பான முழுமையான தோற்றப்பாட்டை, அழிபாட்டு நிலையை, கலை மரபுகளை, கோயில் தோற்றம் பெற்ற காலத்தை அடையாளப்படுத்தக் கூடிய கல்வெட்டுக்களை சக்தி குழுவினர் நேரில் வந்து, பார்வையிட்டு, ஆவணப்படுத்தி, அவற்றை மக்களுக்கு கொண்டு செல்கின்றபோது, இவ்விடயம் தொடர்பில் மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஆகவே சக்திக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் மேலும் குறிப்பிட்டார்.

மிகுந்த களைப்புடன் இருந்த எமக்கு தொல்லியல் மாணவர்கள் அன்புடன் கொடுத்த மதிய உணவுடன், கொழும்பு நோக்கிய பயணத்தை நாம் ஆரம்பித்தோம்.

நன்றி சத்தி எப்பம்
அபர்னா சதன்
உமாச்சந்திரா பிரகாஷ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.