கிளிநொச்சியில் மக்கள் சிந்தனைக்களம் அங்குரார்ப்பணம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக மக்கள் சிந்தனைக்களம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(03-02-2019)  மாலை மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சி கருணா நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் சிந்தனைக்களத்தின் பிரதிநிதிகளான யாழ்  போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர். த.சத்தியமூர்த்தி. காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை ரி. யோசுவா அடிகளார், கிளிநொச்சி சின்மியா மிசன் சுவாமி சிவேந்திர சைத்தன்ய,  அருட் தந்தை டானியல்,  கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்  செயலாளர் திருமதி அருள்சோதி, அதிபர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்த தெரிவித்த அவர்கள்

மக்கள் சிந்தனைக்களம் கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது. இதன் பிரதான நோக்கம் என்னவென்றால் மக்கள் தாம் சொல்ல விரும்புகின்றவற்றை சொல்ல தயங்குகின்ற போது அல்லது சொல்ல விரும்புகின்றவற்றை  சரியான முறையில் சொல்வதற்கான வாய்ப்புக்களை தேடுகின்ற போது அவ்வாறான விடயங்களை சிந்தித்து, கலந்துரையாடி சொல்ல வேண்டிய இடங்களுக்கு  சொல்வது மக்கள் சிந்தனைக் களத்தின் ( சிந்தனையாளர் வட்டம்) நோக்கமாகும்.

நான் நானாக இருக்கிறேன், நீ நீயாகவே இரு மக்களுக்காக ஒரு கணம் சிந்திப்போம்  என்ற தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு  இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை கூடி கலந்துரையாடி  விடயங்களை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் இதன் பணியாகும்.  இவ்வமைப்பானது  கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு அழுத்த குழுவாக இருந்து செயற்படும்.

இச் சிந்தனையாளர் வட்டத்தில்  அங்கம் வகிப்பவர்கள்,   எந்த பின்புலத்தையும் சார்ந்தவர்களாக இருக்கலாம் எந்த கொள்கையோடும் இருக்கலாம்  ஆனால் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க கூடியவாறு இவ் வமைப்பில் இணைந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை, சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள முடியும்

சிந்தனையாளர் வட்டத்தில்  நடுநிலையாக சிந்திக்க கூடியவர்கள் இணைவதில் தடையில்லை, இதுவொரு அமைப்பாக செயற்பட்டாலும் இங்கு தலைவர் செயலாளர் என்ற நிர்வாக கட்டமைப்பு இல்லை, இரண்டு வாரத்திற்கு ஒரு  தடவை கூடுகின்ற போது ஒருவர் தலைமை  வகிப்பதோடு, மிக முக்கியமான விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறும்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  சிவில் சார்ந்த அமைப்புக்கள், அல்லது குரல் கொடுக்க கூடிய அமைப்புக்கள்  மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இதுவொரு பாரிய பிரச்சினையாகும், இதனால் இங்குள்ள மக்கள் பிரச்சினைகள் வெளியிடங்களுக்கோ, அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கோ கொண்டு செல்லப்படுவதில்லை எனவே இச் சிந்தனையாளர் வட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி அவற்றை அரசு, அரசியல்வாதிகள்,  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை காணும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது

 இவ்வூடகச் சந்திப்பில்  சிந்தனையாளர் வட்டத்தின் ஏனைய பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.