பல்கலை மாணவர்களின் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு – த.தே.ம.மு!!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.


அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இறுதி முடிவுக்கு முன்னர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு உரிமைக் கோரிக்கையை உரத்துக்கூற வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தமது உறவினர்களைத் தேடி அலையும் மக்கள் விரக்தியின் விளிம்பிற்குச் சென்றவர்களாக கடந்த இரண்டு வருடங்களாகத் தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவருகின்றார்கள். அவர்களது கோரிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு கருத்தில் எடுக்கவும் இல்லை எடுக்கப்வோவதும் இல்லை.

இதனிடையே, காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகக் காட்டி காணாமல் ஏமாற்றியும் தேடும் முயற்சியை கைவிடச் செய்து மரணச் சான்றிதழ் பெறவைக்க அரச இயந்திரம் முயன்று வருகின்றது.

அத்துடன் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

மேற்படி விடயங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 செப்ரெம்பரில் 30/1 இலக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்ற பெயரில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்போவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா தொடர்பில் வெளியான நகல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது இறுதி முடிவு எடுக்கமுன்னதாக தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பல்லாயிரமாகத் திரண்டு எமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தல் காலத்தின் கட்டாயமாகும்.

எனவேதான், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா.பாகாப்புச்சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினராகிய நாம் பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச சமூகத்திற்கு ஒற்றுமையாய் ஓரணியில் மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்த பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.