மட்டக்களப்பில் மறத்தமிழர் என்னும் புதிய கட்சி

 மட்டக்களப்பில் புதிய கட்சியொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுணதீவில் நடைபெற்றது.
வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் மறத்தமிழர் கட்சி என்னும் பெயருடன் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் ஆலோசகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசியக் கொடி, கட்சி கொடியேற்றப்பட்டு தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரினால் கட்சி அங்குரார்ப்பண பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து ஊடக சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவிக்கையில்,
“இதுவரை காலமும் எமது மக்கள் வாக்களித்துத் தேர்வுசெய்த அரசியல் பிரதிநிதிகள் எமது மக்களின் நிலைமைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம். எமது இந்தப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சகல வளங்களும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக் கொண்டு வளம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து எங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்.
தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது.
எமது மக்களுக்காக எமது வளங்களை வைத்துக்கொண்டு வளம் சார்ந்த தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், அபிவிருத்திகள் என மறத்தமிழர் கட்சியினராகிய எமது அரசியல் தொடர்ந்து நீளும் அதற்கு எமது மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களை சரியாகப் பயன்படுத்தி எமது வளங்களை வைத்துக் கொண்டு ஒரு முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. இருப்பினும், உரிமை சார்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் அனைத்து விடயங்களுக்கும் வெளியில் இருந்து எமது ஆதரவினை வழங்குவோம்.
மறத்தமிழர் கட்சி ஒருபோதும் எவருடனும் இணைந்து செயற்பட மாட்டாது. தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் எமது கட்சி போட்டியிடும். இதனைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.