ஐபிஎல்: சென்னையின் வெற்றி தொடருமா?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 12 ஆவது சீசன் களைகட்டியுள்ளது. தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று பலம் வாய்ந்த சென்னை அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சந்திக்கிறது.
இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டிகளில் வெற்றி கண்டுள்ளதால் சம பலத்துடன் இன்றைய போட்டியை எதிர்நோக்கியுள்ளன. டெல்லி அணியின் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துவக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும். பந்துவீச்சில் காகிசோ ராபாடா, டிரெண்ட் போல்ட்டுடன் இணைந்து மிரட்ட இஷாந்த் ஷர்மா காத்திருக்கிறார்.
சென்னை அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியில் இவர்களின் வானவேடிக்கையை எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய ஹர்பஜன் சிங் - இம்ரான் தாஹிர் சுழல் கூட்டணிக்கு இந்த மைதானம் ஏதுவாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். சென்ற போட்டியில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங்தான் டெல்லிக்கு எதிராக அதிக விக்கெட் (21 விக்கெட்) வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார். தோனியின் அதிரடி ஆட்டத்தையும் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றைய போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இம்மைதானத்தில் இவ்விரு அணிகளும் இதுவரையில் 6 முறை மோதியுள்ளன. அதில் சென்னை அணி 4 முறையும் டெல்லி அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி - சென்னை இடையேயான போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 2010 சீசனில் 190 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக டெல்லி அணி 2013 சீசனில் 83 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது

No comments

Powered by Blogger.