பிரபஞ்சத்தின் கனதிக்குள் பெண்மையின் மென்மையைத் தேடி!

பிரபஞ்சத்தின் கனதிக்குள் பெண்மையின் மென்மையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்


சூரிய அஸ்த்தமனத்தில் நீராடக் காத்திருக்கும் மாரிகாலக்
கடலன்னையைப் போல்
பெண்மையின் புனிதத்தில் சரணடைய காத்திருக்கிறது பிரபஞ்சம்

கருவின் பசுமைக்குள் துளிர்விட்டுத்  தளிராகி உருவாகி பெண்மையை
கிழித்து  சிதைத்து பெரு வலியோடே செய்யப்பட்டது இப் பிரபஞ்சம்

முதன்மொழியாம் தாய்மை  தன் உயிர்க்கோளத்தை அள்ளியெடுத்து
முகர்ந்து முத்தமிட்டு அணைத்துக்கொள்ளும் போது கூட அம்மாவின்  மொத்த குருதியையும் பாலாக்கி
பருகி மகிழ்ந்தது  இப் பிரபஞ்சம்

இளமையின் துடிப்பில்
இன்பமான காதலில் பெண்மையின் அன்பிற்கே ஏங்கி ஏங்கி வேகுகின்றது
பெண்மையின் உணர்வோடு விளையாடத்துடிக்கும் பொய்மைப் பிரபஞ்சம்

அந்திவான் பொழுதின் இளவர்ண
விசும்பல் போல
முதுமையின் விளிம்பில் விசும்பும்  இறுதிநொடி கூட பெண்மையின் ஆதரவில் துயில்கொள்ள ஆசைகொள்கிறது பிரபஞ்சம்

அண்டசராசரத்தில் ஐம்பூதங்களின்
ஆட்சி போல்
தமக்கையாய் தங்கையாய் நண்பியாய் ஆசானாய் பாட்டியாய் மொத்த அன்பையும் அறிவையும்
அரவணைத்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது
பிரபஞ்சத்திற்கு பெண்மை

மொத்தத்தில் பெண்மையின்
மூச்சுத்தழுவாத பிரபஞ்சமில்லை

 மகளிர் தின வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.