பசியை நிரந்தரமாக நீக்குகிறவன் தான் நல்ல தலைவன் : சீமான்!!

பசியை, தற்காலிகமாக நீக்குகிறவன் தலைவன் அல்லன். பசியை நிரந்தரமாக எவன் நீக்குகிறானோ, அவன்தான் நிரந்தரமான தலைவன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


திருச்சி கீழப்புதூரில் நேற்று (11 ஆம் திகதி), நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து பிரசாரம் செய்தபோது சீமான் இவ்வாறு தெரிவித்தார்.

“ஏழைகளுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருவேன் என்கிறார் ராகுல்காந்தி; விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் போடுவேன் என்கிறார் மோடி. உங்களுடைய ஓட்டுகளை பெறுவதற்காக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என பசப்பான வார்த்தைகளை கூறுவார்கள். அதைக்கேட்டு ஏமாந்து விடாதீர்கள். மோடி தனது 5 ஆண்டு கால ஆட்சியில், 6 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் போட்டு முடிக்காமல் விட்டது ஏன்..? உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், ஆட்சிக் காலத்திலேயே அதை செய்து முடித்திருக்கலாமே..?

இந்த 5 ஆண்டுகால ஆட்சியில், இரண்டே இரண்டு சட்ட வரைவுகளை அவசர அவசரமாக கொண்டுவந்திருக்கிறது பாஜக அரசு; அதில் ஒன்று, முஸ்லிம் பெண்களுக்கான முத்தலாக் தடை தடைச் சட்டம். இதற்கு, ‘பெண்களைக் காப்பாற்ற ஒருமசோதாவை கொண்டு வந்திருக்கிறேன்’ என்கிறார் மோடி.

ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், தீவிரவாதத்தை ஒழிப்போம் என்றவர்களின் பேச்சை நம்பிய மக்கள்தான் ஒழிந்தார்களே தவிர, அவர்கள் சொன்ன எதுவும் ஒழியவில்லை. கஜா புயலால் உருக்குலைந்த தமிழக மக்களை பார்வையிட வராத மோடி மற்றும் ராகுல்காந்தியால், தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்க எப்படி வர முடிகிறது..?

தொழில் துறையில் இந்தியாவின் கட்டமைப்பு, வெளிநாட்டு முதலாளிகளுக்கே சாதகமாக உள்ளது. இந்தியா கூறும் வளர்ச்சி என்பது கொடுமையான ஒரு மாய காட்சி. ஆனால், நாங்கள் கூறும் வேலை வாய்ப்பு கட்டமைப்பு என்பது, உலகிற்கே வழிகாட்டுவதாக அமையும். நாம் தமிழர் கட்சி பேசும் அரசியல், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பொதுமைக்கானது.

ஆனால், இவர்கள் சொல்லும் அபிவிருத்தி என்ன தெரியுமா..? ஒருவன் சோறின்றி பட்டினிகிடந்து செத்தால், அவன் உடலை கட்டையில் வைத்து எரிக்காமல், கரன்ட்-டில் (மின் மயானம்) வைத்து எரிப்பது. இதுதான் வளர்ச்சியா..? பிச்சைக்காரன் ஸ்வைப் மெஷினை வைத்து பிச்சையெடுப்பது டிஜிட்டல் இந்தியா கிடையாது; பிச்சைக்காரனே இல்லாத தேசம்தான் டிஜிட்டல் இந்தியா.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆடு, மாடு வளர்ப்பதை அரசுப் பணியாக்குவோம் என்றால், அதை கேலி செய்து சிரிக்கும் இந்த சமூகத்தில்தான், பட்டப்படிப்பு முடித்தவர்கள் ராஸ்மாக் மதுபானக் கடையில் பணிபுரியும் நிலையும், துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையும் உள்ளது. பி.எஸ்சி, எம்.எஸ்சி. படித்துவிட்டு அரசு ராஸ்மாக்கில் பணிபுரிவதைவிட, ஆடு மாடு மேய்ப்பது ஒன்றும் கேவலமான தொழில் அல்ல.

நமது நாடு எத்தியோப்பியாவாக மாறாமல் இருக்கவேண்டுமானால், சரியான தலைவனைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சியும், 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சியும் உங்களுக்கு என்ன செய்தன..? எனவே, அவர்களை ஒதுக்கிவிட்டு, புதிய அரசியல் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல பொருட்களை தேடிச்சென்று வாங்குவது போல், 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கும் நல்ல தலைவரை தேடிச் சென்று தேர்ந்தெடுங்கள்” என்று சீமான் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.