யாழில் வெளியிடப்பட்ட"இயற்கை வழி"செய்தி மடல் அறிமுக நிகழ்வு!!📷

உலக சுற்றுசூழல் தினமாகிய இன்று மாலை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் இயற்கை வழி இயக்கத்தின் மாதாந்த செய்திமடல் "இயற்கைவழி" அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வினை மருத்துவர் பிரபு அவர்கள் தலைமைதாங்கி நடத்தியிருந்தார். முதலாவதாக யாழ்மாநகரசபை ஆணையாளர், கவிஞர் திரு த ஜெயசீலன் அவர்கள் செய்தி மடலின் உள்ளடக்கம் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்தார், தொடர்ந்து மருத்துவர் சிவன்சுதன் அவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பிலும் செய்திமடலின் அவசியத்தை பற்றியும் சில கருத்துக்களை கூறினார். அடுத்ததாக அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் ஆற்றுகை நிகழ்வு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து எழுத்தாளர் சாந்தன் அவர்கள் சுற்றுச்சூழல் மாசடைவது மனிதனின் செயற்பாடுகளினாலேயே என்பதை சுட்டிக்காட்டி, சூழலை பாதுகாக்க நாம் என்ன மாற்று வழிகளில் செல்லவேண்டும் என்பது தொடர்பில் சில கருத்துக்களை கூறினார்.
இடைவேளையில் பண்பாட்டு மலர்ச்சிகூடத்தில் அமைந்துள்ள குடிலில் மோதகமும் வடையும் இஞ்சித்தேநீரும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து கருத்துரை வழங்கிய தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள், இயற்கைவழி செய்திமடல் தொடர்ந்தும் மாதம் தோறும் சிறப்புற வெளிவர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திரு பன்னீர்செல்வம் அவர்கள் பனைவளம் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். பின்னர் செய்திமடல் தொடர்ந்து வெளிவர என்ன என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எண்பது பற்றியும், எல்லா மட்டங்களுக்கும் செய்திமடலை எவ்வாறு கொண்டுசெல்வது, பாடசாலை மாணவர்களிடம் எவ்வாறு கொண்டுசெல்வது, ஆக்கங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றது. நன்றியறிவித்தலோடு நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது .

No comments

Powered by Blogger.