மட்டக்களப்பு வைத்தியசாலையில் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு கிட்டியது!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் கழிவகற்றல் பிரச்சினையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மாவட்டச்செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளும் நேற்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட நிலையில், குறித்த சிக்கல் நிலையினை தீர்க்கும் வகையிலான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் கலாராணி, வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், செங்கலடி பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச சபை தவிசாளர், செங்கலடி பிரதேச செயலக பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் குறித்த கழிவுகளை புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கரடியனாறு பொலிஸ் ஊடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சீர்செய்யும் வகையிலும் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கழிவு வாகனங்களை அகற்றுவது தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது.

இதன்போது மக்கள் பிரதிநிதிகளுக்கும் வைத்தியசாலை வைத்தியர்களுக்கும் இடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில் முடிவு ஒன்றை எட்டுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கழிவகற்றல் பிரச்சினையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.