யாருக்கும் அஞ்சா ஈழக் கடல் மகள்!!

தாமரைபோல் விரியும் அலைகளை 
கண்களில் கொண்ட கடற்கன்னி
தம்மை விடவும்
வேகமாய் நீந்தி புன்னகையுடன்
வெடிக்கையில்
கலங்கின மீன்கள்

யாருக்கும் அஞ்சா ஈழக் கடலே
ஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள்
உனக்காய் வெடிசுமந்தாள்
உன்னில் புதைந்தாள்
புத்திர சோகத்தால் உடைந்த தசரதன்போல்
விம்மிற்றுக் காங்கேசன்துறை

தீவை விழுங்க வந்த பருந்தின்
கால்களை முறித்தாள் அங்கயற்கண்ணி
தாயாய் உருகியது வேலணை

இலக்கை தகர்க்காது
திரும்பேன் எனப் போர்க்கோலம் பூண்டவள்
கடலோடு கலந்துபோகையில்
சீறிய அலைகளும்
கரைந்து புரண்டன

நுணலை விழுங்கும் சர்ப்பம்போல
கடலினை குடிக்க வந்த எதிரியின் படகை 
கரைத்து 
கடலுக்கு முத்தமிட்டாள் அங்கயற்கண்ணி 
கடல் அணைத்தது தன் மகளை.

தீபச்செல்வன்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.