அரச இலக்கிய விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்!

நாட்டின் இலக்கிய துறையை போஷிப்பதற்காக அரும் பங்காற்றும் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2019 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (12) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


2018ஆம் ஆண்டில் தமது உன்னத படைப்புகளினால் இலங்கை இலக்கிய துறைக்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களின் சேவைகளை பாராட்டி இதன்போது அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இலங்கை இலக்கிய துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல இலக்கிய படைப்பாளர்கள் மூவருக்கு வாழ்க்கையில் ஒரேயொரு தடவை மாத்திரம் வழங்கப்படும் சாகித்ய ரத்ன கௌரவ விருது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், சிங்கள மொழிக்காக பேராசிரியர் வோல்டர் மாரசிங்க, தமிழ்மொழிக்காக ஐயாதுரை சாந்தன் மற்றும் ஆங்கில மொழிக்காக கமலா விஜயரத்ன ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன .

சிங்கள மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “மகராநந்தய” நாவலுக்காக விராஜினி தென்னகோனுக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “Kakiyan” நாவலுக்காக எல்மோ ஜயவர்தனவிற்கும் தமிழ்மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “அலுவாக்கரை” நாவலுக்காக எஸ்.ஏ.உதயனுக்கும் வழங்கப்பட்டது.

இதனிடையே ஆண்டின் சிறந்த இலக்கிய படைப்பிற்காக வழங்கப்படும் அரச இலக்கிய விருது நந்தன வீரசிங்க எழுதிய “ஷன நியாம” எனும் இலக்கிய நூலுக்காக வழங்கப்பட்டது.

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலா மன்றம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் வருடாந்தம் இவ்விழா ஒழுங்கு செய்யப்படுகிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பெர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ, இலங்கை கலா மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன கலுஆரச்சி, அரச இலக்கிய ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் சமந்த ஹேரத் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இவ்விருது விழாவில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.