தமிழ் வளர்த்த புலோலியூரான் சதாவதானி !!

சதாவதானி கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871 ஆம் ஆண்டு பிறந்தார். அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். புதல்வி பெயர்- சிவஞானாம்பிகை.
குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.

பல சீட்டுக் கவிகள், சிலேடைக் கவிதைகள், சித்திரக் கவிதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக முறையான தமிழ் அகராதி முதலியன இவர்தம் படைப்புகளாகும். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்தால் அவரை அஷ்டாவதானி (அஷ்ட=எட்டு) என்பர். பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்தால் தசாவதானி (தச=பத்து) என்பர். நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி (சத = நூறு) எனபர். சத)நூறு அவதானம் என்பது சாதாரணச் செயலன்று. பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் நிரம்பியிருந்த சபையில் அவர்களின் வினாக்களுக்கு விடையளித்து, கவிதை புனைந்து, சீட்டாடி, தம் முதுகில் எறியப்பட்ட கற்கள் எத்தனை, நெல் மணிகள் எத்தனை, தாம் குடித்த நீர் எந்தக் கிணற்று நீர், எத்தனை முறை மணி ஓசை எழுப்பப் பட்டது எனத் தம் புலன்களுக்கும் மூளைக்கும் கொடுக்கப் பட்ட அத்தனைச் சோதனைகளிலும் வென்று சதாவதானிப் பட்டம் பெறுவது சாதாரணச் செயலன்று.

கதிரைவேற்பிள்ளை தம்பசிட்டியில் பிறந்தாலும் வசித்தது முழுதும் தமிழ்நாட்டில்தான். ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளின் பாதுகாவலனாக நின்றார்.

கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார்.

இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் ‘சுப்பிரமணிய பராக்கிரமம்’ என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.

அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே.

கதிரைவேற்பிள்ளை 1907ஆம் ஆண்டில் நீலகிரியில் இறந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.