உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.



விருது வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி டெல்லி சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 23) நேரில் சந்தித்துப் பேசினார். 


அப்போது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை விடுவிக்க வேண்டுமெனவும், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவினையும் அவர் அளித்தார்.


அந்த மனுவில், “14ஆவது நிதிக் கமிஷன் ஒதுக்கீட்டின்படி 2017-18ஆம் ஆண்டில் தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய இரண்டாவது தவணைத் தொகையான ரூ.1,608.03 கோடி நிதியை விடுவித்ததற்காக எனது சார்பிலும் தமிழக முதல்வர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் தமிழக மக்களுக்கு தரமான சேவையை அளிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயந்திர உற்பத்திப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 18 சதவிகிதமாகவும், வெட் கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாகவும் குறைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் வேலுமணி, “சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் இயந்திர உற்பத்திப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும்” என்று கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
மேலும், “14ஆவது நிதி கமிஷன் ஒதுக்கீட்டின்படி 2017-18ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.2,029.22 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டுக்கு ரூ.4,345 கோடி ரூபாயும் தமிழகத்திற்கு வர வேண்டியுள்ளது. இந்தத் தொகைகளை விடுவித்தால் தமிழக மக்களுக்கு உதவியாக இருக்கும்” என்றும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, “உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.