அரசியல் கைதிகளிற்கு பொது மன்னிப்பு - ராஜிதவின் வாக்குறுதி!

தமிழ் அரசியல்கைதிகள் யாரும் கொள்ளையடித்தோ, கொலை செய்தோ சிறை செல்லவில்லை. அவர்கள் அரசியல்ரீதியாக போராடியவர்கள். மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.


இன்று யாழில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் 1973ம் ஆண்டுகளில் இருந்து உங்களோடு சேர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். 30 வருட யுத்தத்தின் போதும் வாரத்திற்கு 2 தடவைகள், 1988 தேர்தல் காலத்தின் போது யாழ் வந்தேன். இப்போது, சஜித்தை பிரதமராக்கும்படி உங்களிடம் கோருவதற்கு பிரதமரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

2015இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலைமையை விட இன்று மிக சுதந்திரமான நிலை காணப்படுகிறது.

எங்கள் அரசாங்கத்தினால் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், உங்கள் சுந்திரம், வாழ்வுரிமை, ஜனநாயக உரிமை ஆகியன கிடைக்கப் பெற்றுள்ளன.

இன்று உங்களால் வடக்கில் எந்த வீதியில் இறங்கி பிரதமருக்கு எதிராக கோசம் எழுப்ப, ஆர்ப்பாட்டம் செய்ய, போராட்டம் செய்ய உங்களால் முடியும். 2015ம் ஆண்டிற்கு முன்னர் இளைஞன் ஒருவர் வீதிக்கு இறங்கி அரசுக்கு எதிராக போராடினால், இரவில் ஒரு ஜீப் வரும். அவரை கொண்டு செல்வார்கள். அதுதான் அவரது கடைசி நாள். அந்த இருண்ட யுகத்தை நாங்கள் இல்லாமல் செய்து விட்டோம்.

சிவராமிற்கு உலகம் முழுதும் தொடர்பிருந்தாலும், கோட்டாபய அவரை கொண்டு சென்று கொலை செய்து விட்டார். வடக்கில் மட்டும் 39 ஊடகவியலாளர்களை கொன்றார்கள். அதற்கு உங்கள் அரசு என்ன செய்தது என நீங்கள் கேட்கலாம். நாங்கள் அந்த கொலைக்கலாச்சாரத்தை நிறுத்தினோம். அது தொடர்பான விசாரணையை தொடங்கினோம். அது இன்னும் முடியவில்லை.

நாங்கள் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். உங்கள் பகுதி இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக, இந்த பகுதியிலுள்ள ஆளும்கட்சி பிரதிநிதிகள் மூலம் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளோம். இதற்கு முன்னர் எப்பொழுதுமே வடக்கிலுள்ளவர்களிற்கு தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், வடக்கில் ஒரு கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் பங்காளியல்லவென்றாலும், அரசுடன் சேர்ந்து பயணித்ததால் அபிவிருத்தியை கொண்டு வர முடிந்தது. சுகாதாரதுறையில் அன்றைய யாழ் வைத்தியசாலையையும், இனறைய வைத்தியசாலையையும் பாருங்கள். உங்களிற்கு இதய பிரச்சனை வந்தால் நீங்கள் அம்பியூலன்சில் கொழும்பு போக வேண்டியதில்லை. இங்கேயே செய்யலாம். புற்றுநோயாளர்களை மகரகமவிற்கு கொண்டு செல்வதில்லை. தெல்லிப்பழையில் அதற்குரிய சிகிச்சை நடக்கிறது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, சாவகச்சேரி, பருத்தித்துறை வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளோம்.

இம்முறை நாங்கள் வெற்றிபெற்றதும் உங்களிடமிருந்து பெற்ற ஒவ்வொரு அங்குல காணியையும் திரும்பி தருவோம். விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததோ இல்லையோ சிறையிலுள்ள உங்கள் சகோதரர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். வழக்கிருப்பவர்கள் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் யாரும் தனிப்பட்டரீதியில் கொள்ளையடிக்கவோ, கொலை செய்யவோ இல்லை. அவர்கள் அரசியல்ரீதியாக ஒரு அமைப்பிலிருந்து போராடியவர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயாருடன் நான் இரண்டுமுறை உட்கார்ந்து போராடி, ஜனாதிபதியிடம் அழைத்து சென்றேன். ஆனால் சரியான முடிவு கிடைக்கவில்லை. ஆட்சிபீடமேறியதும் அவர்களின் பிரச்சனையை சரியாக ஆராய்ந்து, அவர்கள் இருக்கிறார்களா என பார்த்து, இல்லாவிட்டால் மரணசான்றிதழ் வழங்க நடவடிக்கையெடுப்போம்.

2015இல் இரண்டு அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்ததால் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. நினைத்த அனைத்தையும் செய்ய முடியவல்லை. ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் தமிழ்மக்களிற்காக முன்நின்றவர் என்பதை கூறிக்கொள்கிறேன்.

ஆகவே அந்த பிரதமருடன் சஜித்தை ஜனாதிபதியாக்கி, வடக்கில் நிவர்த்தி செய்ய வேண்டிய அனைத்து பிரச்சனையையும் நிறைவேற்றுவோம். அடுத்து ஆறு ஆண்டுகளில் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாக, இலங்கையர் என வாழும் நிலைமையை உருவாக்குவோம்.

இந்த நாட்டில் நீங்கள் இனவாதிகளல்ல. இனவாதத்தை உண்டு பண்ணியவர்கள் அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகளின் இப்போதைய வரவே ராஜபக்சக்கள்.

ராஜபக்சக்கள் சிங்கள பேரினவாதத்தின் ஊடாக வாக்கை பெற்று நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள். நீங்கள் பிரதமர், சஜித்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.