சஜித்துடன், சந்திரிகா!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்புடன் இணைந்து சஜித்துக்கு ஆதரவாக தீவிர பரப்புரைகளில் சந்திரிகா அம்மையார் ஈடுபடவுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் சந்திரிகா முக்கிய வகிபாகத்தை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி அவரை வெற்றியடையச் செய்யும் வரைக்கும் சந்திரிகா அம்மையார் முழு மூச்சுடன் பணியாற்றினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிகா, இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சஜித்தின் தந்தையான அமரர் ரணசிங்க பிரேமதாஸ களமிறங்கினார்.

அவரை எதிர்த்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திரிகாவின் தயாரான அமரர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார். இருவரும் அரசியல் களத்தில் கடும் சமரில் ஈடுபட்டனர். இறுதியில் பிரேமதாஸ வெற்றி பெற்றார்.

இன்று பிரமேதாஸவின் மகன் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக ஶ்ரீமாவோவின் மகள் சந்திரிகா தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளார்.

எதுவும் நடக்கலாம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார், புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார் என்று நேற்றே செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் சர்வதேச ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளர் சந்திரிகாவிடம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சர்வாதிகாரிகளைத் தோற்கடிப்பதற்காக எதுவும் செய்வேன். நாளை எதுவும் நடக்கலாம்” என்று பதிலளித்திருந்தார்.

அதேவேளை, குறித்த செய்தியாளரிடம் சில தினங்களுக்கு முன்னர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் சந்திரிகா கருத்துத் தெரிவிக்கும்போது, “பண்டாரநாயக்க குடும்பத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் ராஜபக்ச குடும்பமே ஆகும்.

அந்தக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க முடிவெடுத்தமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ராஜபக்ச குடும்பத்தின் தாளத்துக்கேற்ப மைத்திரிபாலவும் தயாசிறியும் ஆடுகின்றார்கள். இந்த ஆட்டம் நிரந்தரமல்ல. விரைவில் முடிவு கட்டப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச பல கொலைகளுக்குக் காரணமானவர். திருட்டுகளுக்கும் உடந்தையானவர். அப்படிப்பட்டவரை இலங்கை மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள். அவரின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.