பொருளாதாரம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் அபாயம்- மங்கள!!

அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


இதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இதே நிலையில் இருந்தால் கடந்த 2014ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் பொருளாதாரம் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “எமது நான்கரை ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கினோமா எனக் கேள்வி கேட்கின்றனர்.

ஆனால் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்காவிட்டாலும் வரலாற்றில் வேலையற்றோர் சதவீதத்தை குறைத்த அரசாங்கமாக நாம் இருந்தோம்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் ரீதியாக எவரும் பழிவாங்கப்படவில்லை என்பதோடு எவரின் தொழிலையும் பறிக்கவில்லை.

இதனிடையே, நாம் அரசியல் ரீதியாக வேலை வாய்ப்புகளை வழங்கியதாகத் தெரிவிக்கின்றனர். நாங்கள் அரசியல் ரீதியில் வழங்கினாலும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கே வழங்கியிருக்கிறோம். வெளிநாட்டவர்களுக்கு அல்ல. இதனால் எவரையும் அரசியல் பழிவாங்க வேண்டாம்.

மேலும் மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது. சுபீட்சமான நாடு எனக்கூறி பல்வேறு வரிகளை நீக்கியிருந்தனர். இதனால்தான் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வரிக்குறைப்பின் காரணமாக 500 அல்லது 600 பில்லியன் வரை அரச வருமானம் இல்லாமற்போயுள்ளது. தேசிய வருமானத்தில் இது 25 வீதமாகும். வற் வரிக் குறைப்பால் மாத்திரம் 180 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய வருமானத் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் அரசாங்கம் வரிகளைக் குறைத்துள்ள போதிலும் அதற்காக மக்களுக்குச் சலுகைகள் கிடைக்கவில்லை. வரித் திருத்தச் சட்டங்கள் எங்கே என அதிகாரிகள் கேட்கின்றனர்.

வரித் திருத்தங்களை மேற்கொள்வதென்றால் அதனை நாடாளுமன்றத்திலே மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான அங்கீகாரத்தை நாடாளுமன்றத்தில் பெறவில்லை. வரிக் குறைப்பினால் இல்லாமலாக்கப்பட்டிருக்கும் நாட்டின் வருமானத்தை எவ்வாறு ஈட்டிக்கொள்வது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.