அவுஸ்திரேலிய விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 அகதிகள்!

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து, பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அகதிகள் தற்போது ஆஸ்திரேலிய விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இது தடுப்பிற்கான மாற்று இடமாக கருதப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் எனும் விடுதியில் 12 மாதங்களாக அகதிகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதில் கசிம் கசிமீ எனும் குர்து- ஈரானிய இசைக் கலைஞரும் அகதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை நோக்கிய பயணத்தை தொடங்கியிருக்கிறார் கசிமீ.

படகு வழியாக அவுஸ்திரேலியாவை சென்றடையும் அவரது கனவு, மனுஸ்தீவில் செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிற்குள் அவரை 6 ஆண்டுகள் தள்ளியிருக்கின்றது.

“அப்போது எனது வாழ்க்கையில் பலவற்றை இழந்தேன். எனது உடல்நலத்தை, இசை மீதான வேட்கையை இழந்தேன். எனது நம்பிக்கையையும் இழந்தேன்,” என்கிறார் 36 வயது கசிமீ.

“கடல் கடந்த தடுப்பில் இருந்த போது எனக்கு மன அழுத்தப் பிரச்னைகள் உருவாகியது. இதனால் மருத்துவ வெளியேற்றச்சட்டத்தின் மூலம், நான் அவுஸ்திரேலிய வர முடிந்தது.”

குர்து- ஈரானிய அகதியான கசிமீ உள்ளிட்ட 80 அகதிகளும், அவுஸ்திரேலிய அரசால் சமீபத்தில் நீக்கப்பட்ட மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டவர்கள்.

இந்த சூழலில், அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்ட பின்னரும் 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளார் கசிமீ.

இந்த நிலையில், அவ்விடுதி அகதிகளை வைத்திருப்பதற்கான இடமாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவுஸ்திரேலிய எல்லைப்படை உறுதி செய்யவில்லை.

அதே சமயம், “ஒப்பந்த ஏற்பாடுகளை, தனிப்பட்டவர்களின் தடுப்பு விவரங்களை, அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் குறித்து எல்லைப்படை விவாதிப்பதில்லை,” என எல்லைப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குடிவரவுத் தடுப்பு என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.