யாழ் மாநகர முதல்வருக்கும் - பிரான்ஸ் நாட்டின் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லவற்று ( Eric Lavertu    ) இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (2) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதல்வர் பிரான்ஸ் நாட்டின் நிதி உதவியில் மாநகரத்தில் செயற்படுத்தப்படவுள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் முன்னைய அரசின் காலப்பகுதியில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வில், முயற்சிகள், மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து தூதுவர் வினவியதுடன், தற்போதைய அரசின் நகர்வுகள் தொடர்பிலான நிலைப்பாட்டையும் கேட்டறிந்தார். அதற்கு முதல்வர் கடந்த அரசின் காலப்பகுதியில் யாழ் மாநகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கியதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியினால் நாம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அமைக்கப்பட்டுவரும்  மாநகரசபை கட்டட பணிகள் தொடர்பிலும், நெடுந்தூர பயணங்களுக்கான பேரூந்து நிலைய அபிவிருத்தி தொடர்பிலும், கடந்த மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து முன்னைய அரசின் காலத்தில் இருந்த ஜனநாயக நிலை தொடர்பாகவும், தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் நிலவும் ஜனநாயக நிலை தொடர்பாகவும் தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்,? எவ்வாறான நிலை காணப்படுகின்றது என தூதுவர் வினவினார். அதற்கு முதல்வர்  கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்ற ஜனநாயக தற்சமயம் இல்லை. குறைவாகவே காணப்படுகின்றது. இந்தியப் பிரதமர் அவர்களை சந்தித்த பிறகு அரசு வெளியிட்ட அறிக்கை முதற்கொண்டு அரசினுடைய தற்போதைய செயற்பாடுகள் வரை அதனை வெளிக்காட்டி நிற்கின்றார். 

உதாரணமாக அண்மையில் 100 000 வேலைவாய்ப்புக்களை வழங்கும் நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரின் பங்கேற்பு குறித்து விளக்கினார், விமான நிலையத்திற்கான உத்தியோக பூர்வ பாதையை பயன்படுத்த முடியாத நிலை காரணம் இராணுவ வசமுள்ள மிகுதிக் காணிகள் விடுவிக்கப்படாமை குறித்தும் விளக்கினார்.

மேலும் இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் மாநகரத்தில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மையத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த கருத்துக்கள் தொடர்பிலும் இதன் போது முதல்வர் தனது கண்டிப்புடன் கூடிய கருத்துக்களை தூதுவருடன் பகிர்ந்து கொண்டார். 

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே அரசு பேச முடியும் என்றும் எமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்குவதலிருந்து விலக முடியாது என்றும் தூதுவருக்கு மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பில் விரிவான விளக்கமொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தூதுவருடனான இச் சந்திப்பில் மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.


Powered by Blogger.