இன்னும் சில மணிநேரங்களில் கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்! உறுதிப்படுத்தினார் பீரிஸ்


ஸ்ரீலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் இன்னும் சில மணித்தியாலங்களில் கலைக்கப்படும் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட எட்டாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் பின்னர் அதன் பதவிக்காலம் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருந்தது.

இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஓகஸ்ட் மாதம் நிறைவடைகின்ற போதிலும் அதனை கலைப்பதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட வேண்டும் என்பதுடன், ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
Powered by Blogger.