கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு: யாரை அதிகம் பாதிக்கிறது?

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்நோயால் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஒரு பேச்சு பரவலாக இருந்து வந்தது. ஆனால் இந்தியாவையும், பாகிஸ்தானையும் தவிர மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பதாக உலகலாவியதரவுகள் தெரிவிக்கின்றன.




அனைத்து நாடுகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில், இந்தியாவில் கொரோனாவால் 76 சதவிகித ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து எவ்வளவு குறைவான நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டால் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் புள்ளி விவரங்கள் மாறுபடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.



இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளைப் பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பாலின வேறுபாடுகள் இல்லை என்று 40 நாடுகளின் தரவுகளைக் கொண்ட globalhealth5050 தரவுகள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளில் ஆண்கள் 50 சதவிகிதம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் ஏறக்குறைய அதே அளவு பெண்களும் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இந்த விகிதங்கள் மாறுபடுகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை மொத்தத்தில் ஆண்கள் மட்டுமே 72 சதவிகிதம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.


உதாரணமாக, கிரீஸில் பாதிக்கப்பட்ட 17,551 பேரில் 55 சதவிகிதம் பேர் ஆண்கள். கொரோனாவால் அதிக இழப்பைச் சந்தித்து வரும் இத்தாலியில் பாதிக்கப்பட்ட 124,547 பேரில் 53 சதவிகித பேர் ஆண்கள். சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் பிப்ரவரி 28 முதல் புதுப்பிக்கப்படவில்லை என்றாலும், அன்றைய நிலவரப்படி 55,924 என்ற எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரம் 51:49 ஆக இருக்கிறது.


அதிகபட்ச கொரோனா சோதனைகளை நடத்திய தென் கொரியாவில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 60 சதவிகித பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று ஜெர்மனியில் 99,255 பேரில் பாதிக்கப்பட்ட ஆண், பெண் விகிதாச்சாரம் 50:50 ஆக இருக்கிறது.


ஆனால் இறப்பு விகிதங்களைப் பொறுத்தவரைப் பெண்களை விட கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகளவு ( இரு மடங்கு அதிகமாக) இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஆண்கள் பெண்கள் இறப்பு விகிதங்கள் குறித்த புள்ளிவிவரங்களை இந்தியா இன்னும் பகிர்ந்துகொள்ளாததால் அதன் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இந்தியாவில் சமூகவியல் காரணிகளால் ஆண் பெண் விகிதாச்சாரம் வேறுபடுவதாகக் கூறப்படுகிறது. 

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையுடன் தொடர்புடைய தொற்றுநோயியல் நிபுணர் கிரிதர் பாபு கூறுகையில், “இந்த விகிதாச்சாரம் இந்தியாவில் வேலைவாய்ப்பு போக்குகளின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து பெண்கள் சர்வதேச அளவில் வேலைக்குச் செல்வது மிகவும் குறைவு. அதன் விளைவாக இந்த மாறுபாடு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறைவு என்பதாலும் இந்த வேறுபாடு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெண்களை விட ஆண்கள் அதிகம் இறப்பது ஏன்?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக இருந்தாலும், உயிரிழப்பதாக இருந்தாலும் நான்கில் மூன்று சதவிகிதத்தினர் ஆண்களாக உள்ளனர். அதாவது 76 சதவிகித ஆண்கள் பாதிக்கப்பட்டால், 73 சதவிகித பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் பாதிப்பு : உயிரிழப்பு விகிதம் ஈரானில் 57:59ஆக உள்ளது. அதாவது 57 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டால் அதில் 59 சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர். இத்தாலியில் 55:69, ஜெர்மனியில் 52:65, சீனாவில் 51:64, ஸ்வீடனில் 51:59, டென்மார்கில் 50:67, ஸ்பெயினில் 49:63, நெதர்லாந்தில் 49:61, சுவிட்சர்லாந்தில் 48:63, அயர்லாந்தில் 48:69, பிரான்சில் 47:58, பெல்ஜியமில் 46:57, போர்சுகலில் 44:58, தென் கொரியாவில் 40:53ஆக இருக்கிறது.

இறப்பு விகிதங்கள்

பெரும்பாலான நாடுகளில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 50 முதல் 80 சதவிகிதம் வரை கூடுதலாக உயிரிழப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தவர்களின் தரவுகள் அடிப்படையில், மற்ற நாடுகளில் ஒவ்வொரு பெண் இறப்புக்கும், எத்தனை ஆண்கள் உயிரிழக்கிறார்கள் என்ற விகிதம் கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பதால் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. அதுபோன்று கொரோனாவாலும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் அதிகளவு புகைப்பிடிப்பதால், அவர்களுக்கு நுரையீரலில் மேலும் பாதிப்பு அதிகமாகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதன் காரணமாகவே பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகளவு கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.



சீனாவைப் பொறுத்தவரை 52 சதவிகித ஆண்களும், 3 சதவிகித பெண்களும் புகைப்பிடிக்கின்றனர். கார்டியன் அறிக்கைப்படி தென்கொரியாவில் ஆண் பெண் இறப்பு விகிதம் என்பது 2:1 ஆக இருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பில் இருக்கும் ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பெண்கள் புகைப்பிடிப்பது குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதோடு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஹெப்பாடிட்டீஸ் பி, சி போன்ற வைரஸ் பாதிப்பு குறைவுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகளவில் 100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களில் 80 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும், இதில் 95சதவிகித பெண்கள் 110 வயதுக்கும் மேல் வாழ்வதாகவும் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் கூறுகிறது.


ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உடல்கள் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகச் சிறப்பாக இருப்பதற்கு மரபணுக்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாகப் பெண் குழந்தைக்குத் தாயிடமிருந்து ஒரு எக்ஸ் க்ரோமோசோமும், தந்தையிடம் இருந்து ஒரு எக்ஸ் க்ரோமோசோமும் கிடைக்கிறது. எக்ஸ் க்ரோமோசோம் என்பது நோய் எதிர்ப்பு தொடர்பான முக்கிய செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது.இதனால் பெண்கள் தொற்று நோய்களுக்கு எதிராகப் போராட வல்லமை படைத்ததாக இருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கான ஆய்வு இன்னும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா
Blogger இயக்குவது.