லயன்களை அண்மித்து வீடுகளை கட்ட வேண்டும் – ஜனாதிபதி

 

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும்.

உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறைபிரச்சினைகள் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தோட்ட மக்கள் வாழும் லயன்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மைகளை விரைவாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமென ” ஜனாதிபதியும், பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

தோட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்தே அவர்களது வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். வீடமைப்பு திட்டமிடலை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாக பேண முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்கஅமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Blogger இயக்குவது.