நீர்வழங்கல் ஆராய்ச்சி மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

 நீர்வழங்கல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் நீர்வழங்கல் அமைச்சின் சார்பில் அமைச்சர் வாசுதேச நாணயக்காரவிற்கும் சீன அறிவியல் அகாடமியின் சார்பில் இலங்கையிலுள்ள சீனத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஹு வேயிற்கும் இடையில் நேற்று  புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

நீர்வழங்கல் மற்றும் அதனுடன் சம்பந்தபட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது பற்றி அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யாங் ஜியேச்சி தலைமையிலான சீன உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். அதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்கள் ஏற்படுவதைத் தவிர்த்தல் மற்றும் அதனை இலக்காகக்கொண்டு தூயநீரை விநியோகித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சீனாவினால் வழங்கப்பட்ட சுமார் 3.4 பில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்தில் நீர்வழங்கல் தொழில்நுட்ப ஆராய்வு நிலையமொன்று அண்மையில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமன்றி சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பகுதிகளில் நிலத்தடி நீரை சுத்திகரிப்பதற்கான 3 செயற்திட்டங்களும் மழைநீரை சேமிப்பதற்கான 20 இற்கும் அதிகமான கட்டமைப்புக்களும் நிறுவப்பட்டமை விசேட அம்சமாகும். இதனூடாக 4000 இற்கும் அதிகமான கிராமங்களுக்கும் 1300 இற்கும் அதிகமான கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கும் நீர் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Blogger இயக்குவது.