துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதா!!

 மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரச பிரதம கொறடாவின் ஊழியர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

குறித்த மனுவில் மரண தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை காணப்படுகின்றது.


2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, வழக்கின் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த மற்றும் 7 ஆவது பிரதிவாதி சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது அரச பிரதம கொறடாவின் ஊழியர்கள் இந்த மனுவை வழங்கியதாகவும் அதில் பல அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் அறிக்கையிட்டுள்ளது.

அத்தோடு இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரியவருகின்றது.

கடந்த அரசாங்கத்தில் சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில், இவோன் ஜோன்சன் என்ற 19 வயது இளம் பெண்ணை கொலை செய்த வழக்கின் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்பவரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்க கடந்த மார்ச்சு மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மிருசுவில் பிரதேசத்தில் சிறுவனொருவன் உள்ளிட்ட 8 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.