கொழும்பு, துறைமுகத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேலும் 82 கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலா 65, 10, 07 கொள்கலன்கள் மூன்று கப்பல்களினூடாக இன்று திருப்பி அனுப்பப்படவுள்ளது. 

ஒக்டோபர் 30 ஆம் திகதி 20 கழிவுக் கொள்கலன்கள் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் சுங்கத்தின் கூடுதல் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜெயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 263 கொள்கலன்களில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

130 கொள்கலன்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், 133 கொள்கலன்கள் கொழும்பு துறைமுக வளாகத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் 21 கொள்கலன்கள் இங்கிலாந்துக்கு முன்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந் நிலையில் மீதமுள்ள கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.