ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை!


 ஈரான் மூத்த அணு விஞ்ஞானி பிரிகேடியர் ஜெனரல் மொஹ்சென் பக்ரிசாதே நேற்று (27) படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் அவரது வாகனத்தை மறித்து ஆயுததாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்போது ஆயுததாரிகளுக்கு அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதேவின் மெய்ப் பாதுகாவலர்களுக்கும் இடையே கடும் துப்பாச்சிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த பக்ரிசாதே மருத்துவமனையில் இறந்தார்.

ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டத்தின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக மிக மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே மேற்குலக புலனாய்வு அமைப்புகளால் கருதப்படுகிறார். “ஈரான் அணு குண்டின் தந்தை” என்றும் அவர் வர்ணிக்கப்பட்டார்.

ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பது குறித்த புதிய கவலையின் மத்தியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் இராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கமாகும்.

இதேவேளை கடந்த 2010 – 2012 காலப்பகுதியில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கொலைகளுக்கு இஸ்ரேல் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.