தாய்மொழியும் செந்தமிழும் ஓர் பார்வை - கட்டுரை!


 முன்னுரை

மனிதனின் பிறப்பாலும் மரபாலும் பின்னிப் பிணைந்த ஓர் பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி. அத்தகைய தாய்மொழியின் அறிவைப் பெற்று இன்புற வேண்டுமெனில் தாய்மொழிக்கல்வி அவசியமான ஒன்றாகும். ஏனெனில் ஒருவன் என்னதான் பிறப்பில் அறிவாளியாக இருந்தாலும் எழுதப் படிக்கத் தெரியாமல் போனால் அவன் முகத்தில் இரண்டு புண்ணுடையவனாகவே கருதப்படுகிறான். இதனை அறிந்த தமிழ்ப்பாட்டன் வள்ளுவன்,


கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (குறள்.393)

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டியுள்ளார். உலகப் பேரறிஞர்களாகத் திகழும் சாக்ரடீஸ், பிதாகரஸ், பிளாட்டோ, கலிலியோ, அலெக்சாண்டர் கிரகாம்பெல், கிரிகோர்மெண்டல், ஹிராடெடஸ், ஜெகதீஸ் சந்திரபோஸ், இராமானுஜம், சேக்ஸ்பியர், இரவீந்தரநாத் தாகூர் போன்ற அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் தாய்மொழியில் சிறந்து விளங்கியவர்களே என்பது சுட்டத்தக்கது. இன்று உலகமே தாய்மொழியின் அவசியத்தை உணர்ந்துள்ளது. தாய்மொழியின் அறிவு திறத்தாலேயே பிறமொழி அறிவில் சிறந்து விளங்க முடியும் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

உலகத் தாய்மொழி நாள்

உலகில் அழிந்து வரும் மொழிகளைக் காப்பது குறித்து கலந்துரையாடிய ஐ.நா. சபை 17.11.1999இல் கூடியபோது பிப்ரவரி - 21 ஐ உலகத் தாய்மொழி தினமாகப் பிரகடனம் செய்தது. குறிப்பாக அந்தமான் தீவில் போஸ்ர என்னும் 85 வயது மூதாட்டி பிப்ரவரி 2010 இல் இறந்தார். அதனால், 6500 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க மொழியான போவும் அழிந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மொழியின் முக்கியத்துவம் - கூற்றுகள்

மனிதன் முதலில் கற்க வேண்டியதும் அறிய வேண்டியதும் தாய்மொழியேயாகும். இதனைப் பல உலகியல் அறிஞர்களும் தன்னிலை நின்று வலியுறுத்துகின்றனர். இவற்றுள் ஒரு சில அறிஞர் பெருமக்களின் கூற்றை இங்குக் காண்போம்.

“தாய்மொழி தனது முழு மதிப்பினையும் பெற்று என்று மாநிலமொழியாகிறதோ அன்றே நாம் கனவில் கூடக் காணமுடியாத அளவிற்குச் சிறந்த ஆற்றலை அது பெற்றுவிடுவதைக் காணமுடியும்” (மகாத்மா காந்தி)

“தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டு வர முடியும்” (மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்)

“தாய்மொழியில் கல்வி பயின்றால்தான் அடிப்படை அறிவியலைப் புரிந்து படிக்கவும் சாதிக்கவும் முடியும்” (தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்)

மேலும் பாரதியார், அரவிந்தர், இரவீந்தரநாத்தாகூர், சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர் போன்ற இந்திய சிந்தனையாளர்களும் பெஸ்டலாசி, பிளாட்டோ போன்ற மேனாட்டுச் சிந்தனையாளர்களும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்று வலியுறுத்துகின்றனர்.


பதினான்கு வயது வரை தாய்மொழிக்கல்வி

எடுத்துக்காட்டாகச் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சில நாடுகளில் ஆங்கிலேயர் ஆண்டதால் ஆங்கிலக் கல்வி முறையே இருந்தது. 1990இல் நடந்த யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி என்ற மாநாட்டிற்குப் பின்னர் இந்த மொழிக்கொள்கையில் மாற்றம் வந்தது. தொடக்கக் கல்வியில் தாய்மொழியின் அவசியத்தை அந்த நாடு உணர்த்தியது. அதன் பின்னர் ஆப்பிரிக்க நாடுகளில் தாய்மொழியில் தொடக்கக் கல்வியை மெல்ல புகுத்தினர்.

முதலில் மூன்று ஆண்டுகள் அதாவது மூன்றாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கொடுக்கப்பட்டது. இதில் சில இடர்பாடுகளைச் சந்தித்தனர். குழந்தைகள் தாய்மொழியில் புலமையடையாத போதே அவர்களுக்கு வேற்றுமொழிக் கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்களால் தங்களை வேற்றுமொழிக் கல்விக்குத் தயார் படுத்திக்கொள்ள இயலவில்லை.

இதனால் மூன்று ஆண்டு தாய்மொழிக்கல்வியைக் குறைந்தது எட்டு ஆண்டுகளாவது ஆக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். மூன்றாம் வகுப்பு வரை இருந்த தாய்மொழிக்கல்வி ஒன்பதாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு எளிமையாக இருந்தது மற்றும் இதன் மூலம் நல்ல பலனைக் கண்டனர். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் தாய்மொழியில் கல்வி பதினான்கு வயது வரை இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு யுனெஸ்கோ வந்தது.

தாய்மொழியில் கல்வி கற்பவர்களால் ஆங்கில மொழியில் கற்பவர்களைப் போல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாது என்ற கருத்து நம் மக்களிடத்தில் உள்ளது. இது மிகவும் தவறான கருத்தாகும். இன்று இருக்கும் கல்வித்தரம், கல்விக் கூடங்களின் தரம் மற்றும் அதைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் தரம் கொண்டு இந்த முடிவினை ஏற்க முடியாது.

தாய்மொழியில் கல்வி இருப்பினும் நன்கு தொடர்புத்திறன் கொண்ட ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் ஆங்கிலத்தில் கல்வி கற்பவர்களை விட நல்ல ஆங்கிலப் புலமைமிக்க மாணவர்களை உருவாக்க முடியும். இதற்குக் காரணம் நாம் எந்த மொழியில் கற்றாலும் நம் சிந்தனை என்பது தாய்மொழியில் இருப்பதேயாகும். தாய்மொழியில் எண்ணங்களை எடுத்துரைக்கும் ஆற்றல் இல்லாமல் வேறு எந்த மொழியைக் கற்பினும் அந்த மொழியில் வல்லமை பெற முடியாது.

தாய்மொழியால் வளர்ந்த நாடுகள்

தற்போது 600கோடி மக்கள் தொகைக் கொண்ட உலகில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வெறும் 47 கோடிதான் என்பது கசப்பான உண்மை. ஆங்கிலேயர் காலனியம் பல நாடுகளைக் கவ்வியதால் முற்காலத்தில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றது. நவீன காலனியம் மூலம் அமெரிக்கா தற்போது அதே வேலையைச் செய்வதால் மீண்டும் ஆங்கிலம் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். சுமார் 140கோடி மக்களைக்கொண்ட சீனாவில் மாண்டரின் என்கிற அவர்களின் தாய்மொழியில்தான் ஆட்சிமொழி. செர்மனி, பிரான்சு, உருசியா, கொரியா, சப்பான் போன்ற நாடுகளிலும் தாய்மொழியே ஆட்சிமொழியாக உள்ளது. உலகில் ஆங்கிலத்தைவிட ஸ்பானிஷ் மொழியே அதிக மக்களால் பேசப்பட்டும் பயிலப்பட்டும் வருகிறது.

தொழில்நுட்பப் பரிமாற்றம்

உலகில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், பொறியர்கள், மருத்துவர்கள் நாடுகளுக்கிடையே கருத்துக்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்றாகிறது. இச்சூழலில் சப்பானைச் சேர்ந்த பொறியாளர் சென்னையில் உள்ள பிரபல தொழிற்சாலைக்குத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய வருகிறார்.

தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து அன்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவரால் சரியாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரியவில்லை. அதற்காக அவரின் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. சப்பான், செர்மனி, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தை மொழி அளவிலேயே கற்கிறார்கள் ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே அதைக்கொண்டு ஒருவனின் திறமையை மதிப்பிட முடியாது.

தாய்மொழிக் கல்வியின் நன்மைகள்

பன்மொழிக்கல்வியை அறிவுறுத்தும் இக்காலத்தில் தாய்மொழிக் கல்வியால் நிறைந்த நீடித்த நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவை,

1. விரைவாக வாசிக்கப் பழகுதல்

2. பயில ஆர்வமாதல்

3. ஏற்கனவே உள்ள மொழியறிவைத் தூண்டுதல்

4. சுலபமாக ஒலித்தல் உரையாடுதல்

5. கல்வி கற்க செலவுக் குறைதல்

6. எளிதாக இன்னொரு மொழியைக் கற்றல்

7. பண்பாட்டுப் பாரம்பரிய அரிவைப் பெறுதல்

8. தன்னம்பிக்கை உயருதல்

9. பேச்சாற்றல் அதிகரித்தல்

10. சிந்திக்கத் தூண்டுதல்

11. ஆக்கத்திறனை அதிகரித்தல்

12. வலுவான புரிதல்

போன்ற நன்மைகளாகும்.

தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தும் கல்விக்கொள்கைகள்

1. வார்தாவில் அடிப்படைக்கல்வி மாநாடு - 1937

2. ஏ.எஸ்.முதலியார் ஆணையம் - 1952

3. டி.எஸ்.கோத்தாரி ஆணையம் - 1964

4. தேசியக் கல்விக் கொள்கை - 1986

5. குழந்தை உரிமைகளுக்கான ஐ.நா. தீர்மானம் - 1989

6. யுனெஸ்கோ அறிக்கை - 2005

முதலிய அனைத்தும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகின்றன.

நமது தாய்மொழியில் வளம்

நமது தாய்மொழியான தமிழ்மொழி வரலாறு மிக நீண்டது. உலகமே காட்டுமிராண்டிகளாக இருந்தபோது குமரிக்கண்டத் தமிழன் நாகரிகத்தோடு வாழ்ந்து உலகம் முழுவதும் வாணிபம் செய்து வியப்பூட்டினான். இத்தகைய தாய்மொழி தோற்றம் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இலக்கிய இலக்கண வளத்திற்கு ஈடு இணையான மொழி வேறு எதுவுமில்லை. அத்தகைய தேனினும் இனிய செந்தமிழ் மொழியே நம்முடையது.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே” (மகாகவி பாரதியார்)

“தமிழுக்கு அமிழ்தென்று பேர்” (பாவேந்தர் பாரதிதாசன்)

இத்தகைய சிறப்புடைய தமிழைத் தாய்மொழிக் கல்வியாகப் பயின்று பேறுபெற்றோர் பலர் இருக்கிறார்கள். அவர்களுள் அறிஞர் அண்ணா, முதல் இந்தியக் கவர்னர் ஜனரல் மற்றும் முதல் குடியரசுத்தலைவர் இராஜாஜி, மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சந்திராயன் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, நேர்மைக்குப் பெயர்பெற்ற சகாயம் (இ.ஆ.ப.) போன்றோரைக் குறிப்பிடலாம்.

உலகில் ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தாய்மொழியும் தலைமை மொழியும் தமிழே எனலாம். ஏனெனில், உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழே. உலகில் தமிழர் பரவல் கி.மு. 15,000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டத் தமிழர்களால் நடைபெற்றது. இதனை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. இதனால் உலகமொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளமையை அறியலாம். இன்று தமிழர்கள் 160 நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தமிழ் ஒரு சர்வதேச மொழியாகத் திகழ்கிறது. மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் ஆகிய நாடுகளில் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. தமிழர் வாழும் நாடுகளில் தமிழர்களால் தமிழ்ப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் சில பல்கலைக்கழங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளும் போற்றத்தக்கன.

தாய்த்தமிழும் உலகமும்

தமிழ்ச்சொற்கள் உலகமொழிகள் அனைத்திலும் கலந்து நிலைத்து விட்டது. குறிப்பாகச் சப்பான், கொரியா, சீனா, ஆப்பிரிக்க, கிரேக்க, அரேபிய, ஐரோப்பிய மொழிகளில் ஊடுருவிக்கிடப்பதை மொழியியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் உதாரணத்திற்காகத் தொன்மை வாய்ந்த கிரேக்க - தமிழ்ச் சொல்லாய்வினைக் காண்போம்.

கிரேக்கச் சிந்தனையாளர் சாக்ரடீசும் மொழி ஆய்வில் ஈடுபட்டார். அவரால் சில கிரேக்கச் சொற்களுக்குக் கிரேக்க மொழியில் மூலச் சொல்லினைக் காணமுடியவில்லை. கிரேக்கத்தை அடுத்துள்ள தீவுகளில் வாழ்ந்த காட்டுமிராண்டிகளின் மொழியிலிருந்து அந்தச் சொற்கள் கிரேக்க மொழிக்கு இறக்குமதியாகி இருக்கலாம் என்று அவர் கூறினார். “அந்தக் காட்டுமிராண்டிகள் நம்மைவிடப் பழமையானவர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். “அவர்களுடைய சொல் மூலங்களை ஆராய்ந்தால் மொழியின் தோற்றம் பற்றிய முழுவிளக்கமும் தெரியும். ஆனால் ஆய்வுக்கு அந்த காட்டுமிராண்டிகளின் மொழி பற்றிக் கிரேக்கர்களுக்குத் தெரிவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். (Richard Albert Wilson, Miraculous birth of languages P.12&13).

தாங்கள் மட்டுமே நாகரிகமுடையவர்கள் என்று கிரேக்கர்கள் நம்பினர். கிரேக்கர்களின் வாழிடத்திற்கு அடுத்திருந்த பகுதிகளில் ‘மினோவர்கள் வாழ்ந்தனர் என்றும் இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் பல சொற்களைப் பெற்றுக் கொண்டனர் என்றும் மொழியியல் அறிஞர் அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்த மினோவர்கள் கிரீசுக்கு அருகிலிருந்த தீவில் குடியேறி வாழ்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும்.

கிரேக்க மொழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பதை மொழியியல் அறிஞர் ஞானகிரி நாடார் நூலாகவே வெளியிட்டுள்ளார். (Greek Words Of Tamil Origin) அவர் இந்த நூலைக் கிரேக்க மொழியறிஞர் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அதைப் படித்த அந்த அறிஞர் கிரேக்கச் சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை ஒத்துக்கொண்டார். ஆனால் அந்தச் சொற்கள் கிரேக்கத்திலிருந்து தமிழுக்கு வந்தனவா (அ) தமிழிலிருந்து கிரேக்கத்திற்கு வந்தனவா என்ற கேள்வியை எழுப்பினார். அந்தச் சொற்களுக்குக் கிரேக்க மொழியில் வேர்ச்சொற்கள்(மூலம்) இல்லை. அவை தமிழில்தான் உள்ளன. ஆகவே அந்தச் சொற்கள் தமிழிலிருந்தே கிரேக்கத்திற்குப் போயிருக்க முடியும் என்று ஞானகிரியார் அறிவித்தார். இதன் அடிப்படையில் சாக்ரடீசு குறிப்பிட்ட காட்டு மிராண்டிகள் அந்தத் தமிழ்நாட்டு மினோவர்களே என்பது உறுதியாகும். இதன்முலம் பழமையான கிரேக்க மொழியிலேயே தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கும்போது மற்ற மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்திருப்பதில் வியப்பேதும் இல்லை எனலாம்.

தாய்த்தமிழைப் புகழும் வெளிநாட்டு அறிஞர்கள்

1. மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000-க்கும் நெடுங்காலத்திற்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துச் சமவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது. (திருத்தந்தை ஹீராஸ் (1888-1955) ஸ்பெயின் நாட்டறிஞர், தொன்மை இந்தோ - நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Stuties in Indo Mediterranean culture -1953)

2. செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. (ஹென்றி ஹொய்சிங்டன் (1853), அமெரிக்க நாட்டறிஞர். (1801-1858))

3. அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம்படச் சுட்டுகிறது திருக்குறள். உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த இனிமையான அறவுரை வாசங்களை வழங்கும் நூலைக் காண இயலாது. (ஆல்பர்ட் சுவைட்சர் (1936) - செருமனியில் பிறந்தவர். இவர் மருத்துவராக ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் மருத்துவத் தொண்டாற்றி திருக்குறளின் சுவைஞராக இருந்தார்)

4. இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழிலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும் நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது. (கமில் வாக்லாவ் சுவெலபில் (1973), செக் நாட்டறிஞர் (1927-2009))

5. உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்த உண்மையாகும். ( ஜார்ஜ் எல் ஹார்ட்(2000) அமெரிக்க நாட்டறிஞர் (1927-2009))

6. தமிழிய மொழிகளில் உள்ள சில சொற்களும் வேர்களும் மாந்தன் முதன் மொழியில் இருந்திருக்கக் கூடிய வடிவங்களிலேயே இன்றும் உள்ளனவாகக் கருத இடமுண்டு. (இராபர்ட் கார்டுவெல் 1856 (1875) அயர்லாந்து நாட்டறிஞர் (1814-1891)திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்)

7. பின்லாந்து நாட்டறிஞர் அஸ்கோ பர்போலா (1941- ) அவர்கள், கி.மு.3000-1900 சார்ந்த சிந்து நாகரிக முத்திரை எழுத்துக்களை அறுபது ஆண்டுகளாக ஆழ்ந்த ஆய்வு செய்து அவ்வெழுத்துக்கள் தமிழிய மொழிசார்ந்தவையே என்பதைப் பன்னாட்டுப் பல்துறை அறிஞரும் ஒருமுகமாக ஏற்கும் வண்ணம் தெற்றமாக நிறுவியுள்ளார். (ஆதாரம். Deciphering the Indus script (1994))

இப்பன்னாட்டு அறிஞர்கள் அனைவரும் தமிழின் இனிமை, தொன்மை, வளம் போன்றவற்றை எடுத்துக்கூறிப் புகழ்கின்றனர். “இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக் குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வக்குடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும்” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியமை முக்கியத்துவம் பெற்ற கூற்றாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஏழு பாரம்பரிய மொழிகளில் முதன்மையானது தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

முடிவுரை

நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவற்றில் முதன்மையானது மொழி. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மொழி கலந்துள்ளது. பேச்சு, எழுத்து, குறல், காட்சி எனப் பலவகைகளில் மொழி சிறப்பிடம் பெறுகிறது. இதில் தாய்மொழி என்றால் யாவருக்கும் தனி மகிழ்ச்சிதான். தற்போது உலகமயமாக்களின் வழியாக உலகமே பன்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் நிலையில் தாய்மொழிக்கல்வி அடிப்படையானது என்பதை உணர்ந்துள்ளனர்.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தந்த அறிக்கையில் உலகில் மொத்தம் 7400 மொழிகள் இருப்பதாகவும் இந்தியாவில் மட்டும் நான்கு மொழிக்குடும்பங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலகில் மொத்தம் 13 மொழிக்குடும்பங்கள் இருப்பதாக ச. அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். இதில் 2400 மொழிகள் அடுத்த நூறு ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. எதிர்வரும் நூறு ஆண்டுகளில் அழியும் மொழிப்பட்டியலில் நமது தாய்மொழியான தமிழும் இடம்பெற்றிருப்பது சுட்டத்தக்க செய்தியாகும். தமிழ் மக்கள் 150 நாடுகளுக்கும் மேல் வாழ்ந்து வருவதாலும் தமிழ்நாடு(இந்தியா), சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிசீயஸ் போன்றவற்றில் ஆட்சிமொழியாக இருப்பதாலும் தமிழ் செழித்து வளரும் என நம்பலாம். மேலும் கடந்த ஆண்டில் ஆத்திரேலிய அரசு தமிழ்மொழியைத் தேசியமொழிகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ள செய்தி பெருமைக்குரியதாகும். இன்று ஏராளமான மொழிச்செல்வங்களைக் கொண்டு விளங்கும் உலகின் மூத்த மொழியாகப் பேசப்படும் நம் தாய்மொழியைக் காத்து நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வோம்.

துணைநூற்கள்

1. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008.

2. சூரியநாராயண சாஸ்திரியார், வி.கோ. 1950. தமிழ்மொழி வரலாறு, திருநெல்வேலி: வி. சூ. சுவாமிநாதன் வெளியீடு.

3. மாணிக்கம். வ.சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, 2007.

4. மணவை முஸ்தபா, செம்மொழி உள்ளும் புறமும், அறிவியல் தமிழ் அறக்கட்டளை, அண்ணாநகர், சென்னை 2004.

5. kamil V. Zvelebil, Dravidian linguistics An introduction, PILC.pondicherry 1997.

6. முனைவர் மலையமான், செவ்வியல் மொழி தமிழ்.

7. பேரா.சாலினி இளந்திரையன், தமிழ்ச் செம்மொழி ஆவணம் .

8. கலைஞர் கருணாநிதி, செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.